மதுரை, மே 28: முருகனின் ஆறாம்படை வீடான அழகர்கோவில் மலைமேல் அமைந்துள்ள சோலைமலை முருகன் கோயிலில் வைகாசி மாதம் நடைபெறும் வசந்த உற்சவ விழா பிரசித்தி பெற்றது. அந்த வகையில் இந்தாண்டு வசந்த உற்சவ விழா வருகிற மே 31ம் தேதி தொடங்கி ஜூன் 9ம் தேதி வரை நடைபெற உள்ளது. மே 31ம் தேதி அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு வள்ளி, தெய்வானை, சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெறகிறது. பின்னர் காலை 10 மணிக்கு மேல் காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்குகிறது. பின்னர் 11 மணிக்கு மேல் சண்முகர் அர்ச்சனை, மகா தீபாராதனை மற்றும் சுவாமி புறப்பாடு உள்ளிட்டவை நடைபெற உள்ளது. திருவிழா தொடங்கிய நாள் முதல் ஜூன் 9ம் தேதி வரை சுவாமி புறப்பாடு நடைபெற உள்ளது. மேலும், இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.