கிருஷ்ணகிரி, ஜூன் 10: கிருஷ்ணகிரி அருகே, மகாராஜகடை பகுதியில் யானைகள் அட்டகாசத்தை தடுக்க சோலார் மின்வேலி அமைத்து தரக்கோரி, கலெக்டர் அலுவலகம் முன்பு 300க்கும் அதிகமான விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜகடை, மேகலசின்னம்பள்ளி, வேப்பனஹள்ளி சுற்றுவட்டாரத்தில் கடந்த 7 ஆண்டுகளாக யானைகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது. இதனால், விவசாயம் பாதிக்கப்பட்டு, உயிர்பலியும் அதிகரித்துள்ளது. அப்பகுதிகளில் சோலார் மின்வேலி அமைக்க வலியுறுத்தி மகாராஜகடை மற்றும் குருவினநாயனப்பள்ளி, சின்ன மட்டாரப்பள்ளி, வரட்டனப்பள்ளி, நாரலப்பள்ளி, பெரிய கோட்டப்பள்ளி, கல்லக்குறுக்கி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து 300க்கும் மேற்பட்டோர், நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்களை அங்கிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். 50 பேர் மட்டும் சென்று கலெக்டரை சந்தித்து மனு அளிக்குமாறு அறிவுறுத்தினர்.
ஆனால், அனைவரும் கலெக்டரை சந்திக்க அனுமதிக்க வேண்டுமென கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, கலெக்டர் அலுவலக வளாகத்தின் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் ஏடிஎஸ்பி சங்கர், டிஎஸ்பி முரளி, இன்ஸ்பெக்டர்கள் மணிமாறன், செந்தில்குமார், கிருஷ்ணகிரி வனச்சரகர் முனியப்பன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். காலை 11.30 மணிக்கு துவங்கிய போராட்டம் மதியம் 1.30 மணி வரை நீடித்தது. பேச்சுவார்த்தையை தொடர்ந்து, 50 பேர் மட்டும் கலெக்டரை சந்தித்து மனு அளிக்க ஒப்புக்கொண்டனர். இதையடுத்து சரவணன், முருகேசன், சிவசங்கர், வேலன் அடங்கிய குழுவினர், பிரச்னை குறித்து கலெக்டரிடம் விவரித்தனர்.
அவர்கள் கூறுகையில், ‘கடந்த 7 ஆண்டுகளாக யானை தொந்தரவு அதிகமாக உள்ளது. தற்போது, 12 யானைகள் வந்துள்ளன. கடந்த கொரோனா காலத்தில் ஊரடங்கு அமலில் இருந்தபோது, யானைகள் ஆந்திர வனப்பகுதி வழியாக மகாராஜகடை சுற்றுவட்டார பகுதி வனப்பகுதிகளுக்கு நுழைந்தன. அவை, விவசாய நிலங்களுக்குள் புகுந்து தொடர் அட்டகாசம் செய்வது வாடிக்கையாக உள்ளது. இதனால், விவசாயம் செய்ய முடியவில்லை. கடந்த சில ஆண்டுக்கு முன்பு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்தார். யானைகள் தாக்கி படுகாயமடைந்தால் ரூ.50,000 தருகின்றனர். ஆனால், பல லட்சம் ரூபாய் வரை சிகிச்சைக்கு செலவாகிறது. எனவே, யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க சோலார் மின்வேலி அமைக்க வேண்டும்,’ என்றனர். இதற்கு பதிலளித்த கலெக்டர், சோலார் மின்வேலியையும் யானைகள் முறித்து நிலங்களுக்குள் புகுந்து விடுகின்றன. தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி வனப்பகுதியையொட்டி போடப்பட்டுள்ள இரும்பு கம்பிவேலி போல், அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதையடுத்து, விவசாயிகள் கலைந்து சென்றனர்.