கும்பகோணம், ஜூன் 11: கும்பகோணம் அருகே சோமேஸ்வரபுரத்தில் 11 ஆண்டுகளுக்கு பிறகு நடை பெற்ற திரௌபதி அம்மன் ஆலய தீ மிதி திருவிழாவில் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலு க்கா, சோமேஸ்வரபுரம் கிராமத்தில் அமைந்திருக்கும் திரௌபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழா 11 ஆண்டுகளுக்கு பிறகு வெகுவிமரிசையாக நடைபெற்றது. முன்னதாக சோமேஸ்வரபுரம் தூரிஆறு ஆற்றங்கரையிலிருந்து கரகம், காவடி, அலகு காவடி திரளான பக்தர்கள் எடுத்து வந்து முக்கிய வீதிகள் வழியாக கோயில் அருகே அமைக்கப்பட்டிருந்த தீ குண்டம் அருகே வந்தடைந்தனர்.
தொடர்ந்து விரதமிருந்த 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ குண்டத்தில் இறங்கி தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் அம்மன் வீதி உலா முக்கிய வீதிகள் வழியாக வந்து கோயிலை அடைந்தது. அங்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்த அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் சோமேஸ்வரபுரம் உள்ளாட்சி பிரதிநிதிகள், நாட்டாண்மைகள், கிராமவாசிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர்.