‘‘ஒருவரின் தேர்தல் தோல்வி அதே கட்சியை சேர்ந்த எதிர் முகாமை எப்படி சந்தோஷத்தில் வைத்திருக்கும்…’’ என்று ஆர்வமுடன் கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கோர்ட் தீர்ப்பால் சேலத்துக்காரர் அணியினர் நெற்களஞ்சியம் மாவட்டத்தில் உற்சாகமாக இருந்தனர். ஆனால், இடைத்தேர்தல் முடிவால், நெற்களஞ்சியம் மாவட்டத்தில் உள்ள சேலத்துக்காரர் அணியினர் கடும் அப்செட்டில் இருக்கிறார்களாம். என்ன அதிலும் கொஞ்சம் ஆறுதலான விஷயம் இடைத் தேர்தலில் டெபாசிட் இழக்கவில்லை என்று சேலம்காரர் மட்டுமல்ல, அவரது அணியினரும் மிகவும் சந்தோஷத்தில் உள்ளார்களாம். இதிலும், சேலம்காரரின் முக்கிய தளபதிகள் டெல்லிக்கு போன் செய்து, இவ்வளவு கடினமான தேர்தலிலும் டெபாசிட் வாங்கி இருக்கிறோம் என்றால், எங்கள் கட்சி தலைவரின் உழைப்பு அப்படி என்று சொல்கிறார்களாம். மேலும், நாடாளுமன்ற தேர்தலில் நாற்பது தொகுதியிலும் திறமையான அணியை சேலம்காரர் எப்போதோ தயார் செய்துவிட்டார். நாடாளுமன்ற தேர்தலில் அந்த அணி திறமையாக செயல்பட்டு இரட்டை இலக்கத்தில் வெற்றி பெற்று டெல்லிக்கு செல்லும் வேலையை சேலம்காரர் செய்துவிட்டார் என்று சொல்லி மார்தட்டுகிறார்களாம். அதே நேரத்தில் டெபாசிட் வாங்கியது ஒன்றும் பெரிய விஷயம் இல்ல. கோடிகளை கோணிப்பைகளில் கட்டி இறைத்துவிட்டு, வெறும் டெபாசிட்தானே வாங்கினாரு. அவர் செய்த தேர்தல் செலவுக்கு ஜெயித்து இருக்க வேண்டும். ஆனால், ஏன் ஜெயிக்கவில்லை. மக்கள் அவர் பக்கம் இல்லை என் பக்கம் இருக்கிறார்கள். எங்கள் தலைவர் தேர்தலில் இறங்கி வேலை செய்து இருந்தால் முடிவு மாறி இருக்கும் தேனிக்காரர் அணியை சேர்ந்தவர்கள் உற்சாகமாக ஓட்டலில் உட்கார்ந்து சுடச்சுட காபி குடித்து கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்களாம். இதையே சாக்காக வைத்து, இலை கட்சியின் தோல்வியை வைத்து, தன்னுடைய நிர்வாகிகளை தக்க வைப்பதற்கான முயற்சியில் தேனிக்காரர் அணியை சேர்ந்த ‘வைத்தியானவர்’ தீவிரமாக இறங்கியுள்ளாராம். தேனிக்காரர் மற்றும் சேலத்துக்காரர் போட்டி போட்டு கொண்டு இருப்பதால், இலை கட்சி தொண்டர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம். குறிப்பாக, நெற்களஞ்சியம் மாவட்டத்தில் இலை கட்சி தொண்டர்கள் தேனியா, சேலமா என்று அதிரடி முடிவு எடுக்க இருக்கிறார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தூங்கா நகரத்தில் கட்சி ஒற்றனை நியமித்துள்ள இலையின் தலைவர் எந்த அணியை சேர்ந்தவரு…’’ என்று கேள்வி கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சியின் மம்மிக்கு மிகவும் விசுவாசமாக இருந்தவர் தேனிக்காரர். மம்மிக்கு சிறை சிக்கல் வரும்போதெல்லாம், தேனிக்காரரை நியமிப்பார். இதனால தூங்கா நகரத்துக்கு தெற்கேயுள்ள ரெண்டாம் கட்ட தலைவர்கள் எல்லாம், தேனிக்காரர் சொல்வதை கேட்டுக்கிட்டு இருந்தாங்க. ஆனா, இலைக்கட்சி ரெண்டா உடைஞ்சவுடன், தூங்கா நகரத்தின் தேனிக்காரரின் ஆதரவாளர் இடத்தை பிடிக்க, மூணு தலைகள் கோதாவுல இறங்கியிருக்கா. அதுல பின்தங்கியிருப்பவர் தூங்கா நகரத்தின் மாஜி தந்தையாக இருந்தவராம். தனது கோபத்தை வெளிப்படுத்தி, காரியத்தை சாதிச்சிக்கிட்டாராம். அதே நேரத்துல, தனது தனயனையும் களம் இறக்கியிருக்காராம். தந்தையின் எண்ண ஓட்டத்தை சரியா புரிஞ்சுகிட்ட தனயன், சேலத்து மாஜிக்கிட்ட ஒட்டிக்கிட்டாராம். வரும் தேர்தலில் எப்படியாவது சீட்டை வாங்கிடனுமுன்னு, சேலத்து மாஜி வீட்டு வாசலிலேயே காத்துக்கிடக்கிறாராம். இவரது அப்பாவித்தனத்தை சேலத்து மாஜியும் சரியா பயன்படுத்தி கொள்கிறாராம். தூங்கா நகரத்தில் என்ன நடக்குதுங்கிறதை வேவுபார்த்து, அவ்வப்போது தன்னிடம் சொல்லிடனுமுன்னு சொல்லியிருக்காராம். யார் யாருக்கு எங்கெங்க சொத்து இருக்கு, யாரிடமெல்லாம் தொடர்பு வச்சிருக்காங்க அப்டிங்கிறது மட்டுமல்லாமல், சத்தமா மூச்சுவிட்டா கூட சொல்லிடுறேன்னு சத்தியமும் செஞ்சி, அதற்கான வேலையில் தீவிரமாக ஈடுபட்டிருக்காராம் அந்த தனயன். எப்படியோ தனது இடத்தை தனயன் பிடிச்சிடுவாருங்கிற நம்பிக்கை தந்தைக்கு வந்திருக்காம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘எந்த அதிகாரிகளை சபாநாயகர் வறுத்தெடுக்கப்போகிறார்…’’ என்று ஆவலுடன் கேட்டார் பீட்டர் மாமா.‘‘புதுச்சேரியில் உள்ளூர் துறை அதிகாரிகளுக்கு பல தரப்பில் இருந்து புத்திமதி சொல்லியும் கேட்கவில்லையாம். பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதியை ஆக்கப்பூர்வமாக செயல்படுத்த முட்டுக்கட்டை போடுகிறார்களாம். ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கோப்புகளை தயார் செய்யும்போது எப்படியாவது அரசின் திட்டங்களை எப்படி நிறுத்தலாம்… அதை செயல்படுத்தினால் என்ன ஆகும் என்ற அளவிலே கோப்புகளில் எழுதி வைக்கிறார்கள். இதனால், அமைச்சர்கள் குழப்பத்தில் நமக்கு எதுக்கு வம்பு என்று குறிப்பிட்ட திட்டத்தை செயல்படுத்தாமல் விட்டுவிடுகிறார்களாம். சமீபத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்ட புல்லட்சாமி, இதோ இந்த பகுதியில் சாக்கடை திறந்து கிடக்கிறது. மூன்று மாதமாக சொல்கிறேன், ஸ்லாப்புகளை போட்டு மூடுங்கள் என இதற்கு ஒரு கோப்பு தயார் செய்து அது இன்னமும் நிறைவேறவில்லை. இந்த சின்ன விஷயத்தை கூட அதிகாரிகளால் செய்ய முடியவில்லை. இதில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் எந்த லட்சணத்தில் நடக்கும் என பொதுவெளியில் ஓப்பனாக போட்டு உடைத்துவிட்டாராம். அதேபோல் சபையின் நாயகர், சில துறைகளை சுட்டிகாட்டி, ஒதுக்கப்பட்ட நிதியில் 50 சதவீதம் கூட செலவு செய்யாமல் இருக்கிறார்கள், என்ன காரணம் என அதிகாரிகளை கேட்டாராம். ஆனால், இதோ முடித்துவிடுகிறோம் என அவருக்கும் அல்வா கொடுக்கிறார்களாம். இப்படிப்பட்ட அதிகாரிகளையெல்லாம் வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஒரு கை பார்க்க சபையின் நாயகர் திட்டமிட்டு இருக்கிறாராம்… இந்த தகவலை கேள்விப்பட்ட அதிகாரிகள் கூட்டத் தொடருக்கு முன்பாக திட்டத்தை இறுதி செய்ய முடியுமா என்று யோசித்து வருகிறார்களாம். இதோடு இந்த அதிகாரிகள் லாபியெல்லாம் காலியாகிவிடும் என்கிறார்கள். சட்டசபையில் கூண்டில் சில அதிகாரிகள் ஏறுவதற்கான வாய்ப்பு இருக்கிறதாம். சட்டமன்ற கூண்டிலேற்றி ஏன் செய்யவில்லை என கேட்டு நாள் முழுக்க நிற்க வைக்கும் தண்டனை கிடைக்கலாமாம். இதனைதான் சூசகமாக இந்த முறை பட்ஜெட் செஷன் வித்தியாசமாக இருக்கும் என சபையின் நாயகர் பீடிகை போட்டிருக்கிறாராம்……’’ என்றார் விக்கியானந்தா. ‘‘குமரியில் காக்கி புயல் வீசுதாமே, என்ன காரணம்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘குமரி மாவட்டத்தில் காவல் நிலையம் ஒன்றில் மாவீரன் பெயர் கொண்ட அதிகாரி ஒருவர் பணியாற்றி வந்தார். 2 நாட்களுக்கு முன்பு திடீரென்று அவரை ஆயுதப்படைக்கு மாற்றி காக்கி உயரதிகாரி உத்தரவிட்டார். அவரை எதற்காக மாற்றினார்கள் என்பதில் காரணம் தெரியாமல் சக போலீசார் மற்றும் உளவு பிரிவு போலீசாரும் மண்டையை பீய்த்துக்கொண்டு இருக்காங்க. காவல் துறை உயர் அதிகாரிக்கு சென்ற புகாரே காரணம் என்று கூறுகிறார்களாம். ஆனால், என்ன புகார் என்பதை வெளியிட காக்கிகளின் உயரதிகாரிகள் மறுக்கிறார்களாம். ஆயுதப்படைக்கு மாற்றம் என்பது ஒருவித தண்டனை என்றாலும் எதற்காக இந்த தண்டனை என்பதை அறிய உயர் அதிகாரிகளுக்கு பலரும் போன் மேல் போன் போட்டு கேட்டு வருகிறார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா….