தேவதானப்பட்டி, அக். 20: தேவதானப்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்த கண்ணுச்சாமி மனைவி யசோதா (60) என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மாயாண்டி என்பவருக்கும் சொத்து தொடர்பான பிரச்னை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மஞ்சளாறு வரட்டாறு அருகே உள்ள பிரச்னை உள்ள தோட்டத்தில் அனுமதியின்றி தேங்காய் பறித்ததாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற யசோதாவை, மாயாண்டி, பரமேஸ்வரி, பாண்டியராஜ், அருள்குமார், சரண்யா, நித்யா ஆகிய 6 பேரும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் யசோதாவை அசிங்கமாக பேசி தற்கொலைக்கு தூண்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த யசோதா பூச்சிமருந்தை குடித்து சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து யசோதாவின் புகாரின் பேரில், தேவதானப்பட்டி போலீசார் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.