ஈரோடு, நவ. 28: ஈரோடு மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் சொத்து வரி குறைவாக விதிக்கப்பட்டுள்ள கட்டிடங்களை டிரோன் மூலம் அளவீடு செய்யும் தீர்மானத்திற்கு திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த தீர்மானம் ரத்து செய்யப்பட்டது. ஈரோடு மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் மாமன்றத்தின் சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. மேயர் நாகரத்தினம் தலைமை தாங்கினார். துணை மேயர் செல்வராஜ், இணை ஆணையர் தனலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், மாநகராட்சி 4ம் மண்டலம் கொல்லம்பாளையம் பகுதியில் சிறுபாலம் சீரமைப்பு, அப்பகுதியில் உள்ள அம்ருத் பூங்கா, அம்மா உணவகம், நீருந்து நிலையம், மின் மோட்டார்கள், ஆழ்துளை கிணறு பிவிசி தொட்டிகள், மேல்நிலை தொட்டி தானியங்கி வால்வுகள் போன்றவைகளை பராமரிப்பு செய்வது, 4ம் மண்டல அலுவலகத்தில் யுபிஎஸ் மற்றும் ஜெராக்ஸ் இயந்திரம் பழுதினை சரிபார்க்க பொறியியல் பிரிவு, பொதுப்பிரிவு, சுகாதாரப்பிரிவு, வருவாய் பிரிவு போன்ற பணிகளை மேற்கொள்ள ரூ.29.91 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்குவது எனவும், மாநகராட்சியில் கொசுக்கள் மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்த 436 பேர் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் பணியை கண்காணிக்கவும், தினமும் அறிக்கை சமர்ப்பிக்கவும், தளவாடி சமான்கள் ஏற்பாடு செய்யவும் கள உதவியாளர்கள் இல்லை. எனவே பருவமழை துவங்கியுள்ள காரணத்தினால் கொசு ஒழிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்ளவும், பணிகளை கண்காணிக்கவும் மண்டலத்திற்கு 6 பேர் வீதம் 24 கள உதவியாளர்களை முற்றிலும் தற்காலிகமாக ரூ.754 ஊதியத்தில் நியமிப்பது, ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் வீட்டு உபயோகம், வணிக உபயோகங்களுக்கு பசுமை எரிபொருளாக இயற்கை எரிவாயுவை பயன்படுத்தும் வகையில் 812.03 கி.மீ நீளத்திற்கு குழாய் அமைக்க பாரத் பெட்ரோலியம் கார்ப்ரேஷன் நிறுவனம் மூலம் அனுமதி கோரப்பட்டு, குழாய் பதிக்கும்போது தோண்டப்படும் சாலைகளை சீரமைக்க ரூ.201.40 கோடி வங்கி உத்திரவாத பத்திரம் வழங்கப்பட்டுள்ளதால், இத்திட்ட பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்குவது, மாநகராட்சிக்கு உப்டட்ட பகுதிகளில் வீடுகளில் வளர்க்கும் செல்லப்பிராணிகளான நாய் வகைகள் மட்டும் வளர்ப்பவர்களுக்கு உரிமம் பெறுவதற்கு ஒரு அனுமதிக்கு ரூ.250 வசூலிக்க அனுமதி பெறப்பட்டுள்ளது.
பொதுமக்கள் எளிதாக விண்ணபிக்கவும், விண்ணப்பத்தை பதிவிறக்கவும், மென்பொருள் மூலம் பதிவேற்றம் செய்தவற்கு ஆன்லைன் சேவை வழங்குவதற்கு ரூ.4 லட்சம் உத்தேச செலவுக்கு அனுமதிப்பது என்பன உள்ளிட்ட 34 தீர்மானங்கள் மாமன்றத்தில் கவுன்சிலர்களின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது. இதில், 3வது தீர்மானமாக மாநகராட்சி பகுதிகளில் சொத்து வரி குறைவாக விதிக்கப்பட்டுள்ள கட்டிடங்கள் மற்றும் பயன்பாடு மாற்றப்பட்ட கட்டிடங்கள் ஆகிய இனங்களை டிரேன் மூலம் அளவீடு செய்து, வரிவிதித்து மாநகராட்சியின் வருவாயை உயர்த்த பரீட்சாத்த முறையில் மாநகராட்சி 2 வார்டுகளில் இப்பணிகளை மேற்கொள்ளும் தீர்மானத்திற்கு மட்டும் திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தததால், அந்த தீர்மானம் மட்டும் ரத்து செய்யப்பட்டு, மீதமுள்ள 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக கவுன்சிலர் சபுராமா ஜாபர்சாதிக் பேசியதாவது: மரப்பாலம் பகுதியில் உள்ள ஆடுவதை கூடத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். சுதந்திர தின வெள்ளி விழா பேருந்து நிலையம் தற்போது, பேருந்து நிலையம் மிகவும் மோசமாக உள்ளது. பயணிகளுக்கு பாதிப்பு இல்லாதவாறு சில கடைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டு, பூக்கடைகள் மாநகராட்சியின் சொத்துக்கள் பதிவேட்டில் இருந்ததால் ஏலம் விடப்பட்டு அதன் வருவாய் மாநகராட்சி கருவூலத்திற்கு கிடைத்து வந்தது. தற்போது ஏலம் விடாமலும் வருவாய் எங்கோ சென்று கொண்டிருக்கிறது. இதனை முறைப்படுத்தி பூக்கடைகளை பொது ஏலத்தில் விட்டு, வருவாய் கிடைக்க செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். மண்டல தலைவர் சசிக்குமார் பேசுகையில், 46வது மற்றும் 51வது வார்டில் குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்படவில்லை. 45வது வார்டில் சமுதாய கூடம் அமைக்கும் பணியை விரைவுப்படுத்த வேண்டும் என்றார். மண்டல தலைவர் பழனிசாமி பேசியதாவது: ஈரோடு மேட்டூர் சாலையில் அரசு மருத்துவமனை மேம்பாலத்தை விரிவுப்படுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநகராட்சியில் திறந்தவெளியில் மலம் கழிப்பு இல்லை என்ற சான்றிதழ் பெறுவதற்கு பெருமாள் மலைப்பகுதியில் பொதுக்கழிப்பிடம் அமைத்து தர வேண்டும். ஈரோடு சின்ன மார்க்கெட்டில் மாநகராட்சி வாகனங்களை பழுது நீக்கி பராமரிக்கும் மையம் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சி வளாக சுற்றுச்சுவரில் ‘நம்ம ஈரோடை’ செல்பி பாய்ண்ட் அமைத்து கொடுத்ததற்கு மாநகராட்சி மேயருக்கும், அதிகாரிகளுக்கும் நன்றி. இவ்வாறு அவர் பேசினார். இதேபோல், கூட்டத்தில் பங்கேற்ற மற்ற கவுன்சிலர்கள் பேசியதாவது: மாநகராட்சி பகுதியில் பழுதடைந்த மின்விளக்குகளை மாற்றி புதிய மின்விளக்குகள் பொருத்த வேண்டும். 60 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பை, வெண்டிபாளையம் குப்பைக் கிடங்கை அப்புறப்படுத்த வேண்டும் என நீண்டகால கோரிக்கையாக உள்ளது.இவ்வாறு கவுன்சிலர்கள் பேசினர். இதையடுத்து கவுன்சிலர்களின் கோரிக்கைகள், பிரச்னைகளுக்கு மேயர் மற்றும் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பதாகவும், வளர்ச்சி திட்ட பணிகள் பாதிப்பிற்கு மாநகராட்சி நிதி சுமை காரணம் என்றும் விளக்கம் அளித்தனர்.