நாமக்கல், ஆக.12: நாமக்கல் நகராட்சி பகுதி மக்கள், நிலுவையில் உள்ள சொத்துவரி மற்றும் குடிநீர் வரியை உடனே செலுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் சென்னுகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஜேடர்பாளையத்தில் இருந்து புதிய குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ். பைப் மூலமாக வழங்கப்பட்ட குடிநீர் இணைப்புகளுக்கான டெபாசிட் தொகை, சாலை பராமரிப்பு கட்டணம் மற்றும் குடிநீர் கட்டணம் ஆகியவற்றை செலுத்தாத பொதுமக்கள் உடனடியாக நகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.
டெபாசிட் தொகை மட்டும் ஏற்கனவே செலுத்தியவர்கள் மேற்பார்வை கட்டணம் மற்றும் சாலை பராமரிப்பு கட்டணம், குடிநீர் கட்டணங்களை உடனடியாக செலுத்த வேண்டும். உரிய கட்டணங்களை செலுத்தாத இணைப்புகள் துண்டிக்கப்படும். நிலுவைத் தொகையை வசூல் செய்ய சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், 2023-24ம் நிதியாண்டு மற்றும் 2024-25ல் முதல் அரையாண்டுக்கான சொத்து வரி, காலி மனை வரி, தொழில்வரி, பாதாள சாக்கடை கட்டணம் ஆகியவற்றை செலுத்தாத பொதுமக்கள் உடனடியாக நாமக்கல் நகராட்சியில் செலுத்த வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.