சாத்தான்குளம், செப். 25: சொக்கன்குடியிருப்பு அதிசய மணல் மாதா முதன்மை திருத்தல 225வது ஆண்டு திருவிழாவில் தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோனி மாலை ஆராதனை நடத்தினார். இதில் திரளானோர் பங்கேற்றனர். சாத்தான்குளம் அருகேயுள்ள பிரசித்திபெற்ற சொக்கன்குடியிருப்பு அதிசய மணல் மாதா முதன்மை திருத்தலத்தில் 225வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 15ம்தேதி துவங்கி 10 நாட்கள் விமரிசையாக நடந்தது.
முதல் நாள் கொடியேற்றத்தையொட்டி புனித வளன் தொடக்கப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பெத்லகேம் அன்பியம், பீடபூக்கள், சின்னராணிபுரம் இறை மக்கள் பங்கேற்ற திருப்பயணத்தைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட மறை ஆயர் ஸ்டீபன் அந்தோனி திருவிழா கொடியேற்றி மறையுரை ஆற்றினார். மறை மாவட்ட முதன்மை குரு பன்னீர் செல்வம், சாத்தான்குளம் வட்டார முதன்மை குரு ஜோசப் ரவிபாலன், தென் மண்டல பணிக்குழு ஒருங்கிணைப்பாளர் நெல்சன் பால்ராஜ் முன்னிலை வகித்தனர். இரவு ஜெபமாலை,மறையுரை, நற்கருணை ஆசீர் கடக்குளம் பங்கு தந்தை அன்புசெல்வன், ஆயர் செயலர் ரினோ தலைமையில் நடந்தது.
நவநாட்களில் திருப்பலி, ஜெபமாலை, நற்கருணை ஆசீர் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. 9ம் நாளையொட்டி 23ம்தேதி அதிகாலை 5.30மணிக்கு திருப்பலி, திருப்பயணம், இரவு 7.30மணிக்கு ஜெபமாலை, திருவிழா மாலை ஆராதனை மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோனி தலைமையில் நடந்தது. தொடர்ந்து நடந்த மறையுரையில் அருள்தந்தைகள் ஜாக்சன், திலகர்ராஜ், கூடுதாழை பங்குத்தந்தை வில்லியம், தென் மண்டல் கத்தோலிக்க பள்ளிகளின் கண்காணிப்பாளர் ஜோசப் ஸ்டாலின், பங்குத்தந்தைகள் அணைக்கரை செல்வரத்தினம், தட்டார்டம் கலைச்செல்வன், செட்டிவிளை ஜஸ்டின் மற்றும் திரளானோர் பங்கேற்றனர்.
இரவு 10மணிக்கு அதிசயமாணல்மாதா சப்பரபவனி நடந்தது. 10ம் நாளான நேற்று (24ம்தேதி) அதிகாலை 5.30மணிக்கு 225ம் ஆண்டு பெருவிழா திருப்பலி, திருப்பயணம், மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோனி தலைமையில் மறைமாவட்ட முதன்மைகுரு பன்னீர் செல்வம், ஆயர் செயலாளர் மைக்கிள் சேசு ரினோ முன்னிலையில் நடந்தது. இரவு 7மணிக்கு மறையுரை, ஜெபமாலை, அதனை தொடர்ந்து அதிசய மணல்மாதா சப்பரபவனி நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளானோர் பங்கேற்று வழிபட்டனர்.
இந்நிலையில் இன்று (25ம்தேதி) காலை 6மணிக்கு செம்மணலில் தோண்டி எடுக்கப்பட்ட புதுமை கோயிலில் திருத்தல உபகாரியங்களுக்காக நன்றி திருப்பலி மற்றும் கொடியிறக்க நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை முதன்மை திருத்தல அதிபர் ஜாண்சன் ராஜ் தலைமையில் திருத்தல நிதிக்குழு, அருள்சகோதரிகள், மற்றும் இறை மக்கள்செய்துள்ளனர்.