போரூர், ஜூன் 17: பூந்தமல்லி பகுதியை சேர்ந்த 19 வயது பெண், மதுரவாயல் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அப்போது, திருத்தணி பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் என்பவரிடம் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், சொகுசு கார் வாங்க பணம் வேண்டும் என்று இளம்பெண்ணிடம் அவரது காதலன் கூறியுள்ளார். இதையடுத்து, வீட்டில் இருந்த ரூ.20 லட்சத்தை எடுத்து, காதலனிடம் இளம்பெண் கொடுத்துள்ளார். சில நாட்களில் அந்த வாலிபர், இளம்பெண்ணிடம் பேசுவதை நிறுத்திவிட்டதாக தெரிகிறது. மேலும், அவரது எண்ணை பிளாக் செய்துள்ளார்.
இதனிடையே, வீட்டின் பீரோவில் வைத்திருந்த ரூ.20 லட்சம் மாயமானதை கண்ட இளம்பெண்ணின் பெற்றோர், வீட்டில் உள்ளவர்களிடம் விசாரித்துள்ளனர். ஆனால், எந்த தகவலும் கிடைக்காததால், காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட இளம்பெண்ணின் தந்தை, விவரங்களை கூறி புகார் அளித்துள்ளார். இதனால், பயந்துபோன இளம்பெண், பணத்தை தனது காதலனிடம் கொடுத்ததாக தெரிவித்தார். இவ்வாறு புகாரில் தெரிவித்துள்ளார். இதையடுத்து இளம்பெண்ணின் பெற்றோர், பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், விசாரணைக்காக ஆஜராகும்படி இளம்பெண்ணுக்கு சம்மன் அனுப்பினர். அதன்பேரில், பூந்தமல்லி காவல் நிலையத்தில் நேற்று காலை இளம்பெண் ஆஜரானார். அவரிடம் போலீசார் விசாரித்தனர். தலைமறைவான அந்த வாலிபரை தேடி வருகின்றனர்.