புதுச்சேரி, ஜூலை 4: விசாகப்பட்டினத்திலிருந்து சென்னை வழியாக புதுவைக்கு சொகுசு கப்பல் இன்று வருகிறது. 11 மாடிகள் கொண்ட பிரம்மாண்ட இந்த சொகுசு கப்பலில் பல்வேறு வசதிகள் உள்ளது. இந்த சொகுசு கப்பலில் ஆயிரத்து 400 பேர் பயணிக்க முடியும். இந்த கப்பல் முதல்முறையாக இன்று புதுவைக்கு வருகிறது. அந்த கப்பலில் வரும் பயணிகள் படகுகள் மூலம் புதுவை புதிய துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டு, புதுவையை சுற்றிப்பார்க்க பஸ்கள் மூலம் அழைத்து செல்லப்படவுள்ளனர். இந்த சொகுசு கப்பல் வருகைக்கு அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் சொகுசு-கப்பல் வந்து செல்லும் நேரத்தில் படகுகளை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுவை கடலோர காவல் நிலைய பொறுப்பு அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுவை சுற்றுலாத்துறை அறிமுகப்படுத்தும் சொகுசு கப்பல் பயணம் இன்று வெள்ளிக்கிழமை புதுவை புதிய துறைமுக பகுதியில் இயக்கப்பட உள்ளது. எனவே இன்று காலை 9 மணி முதல் முதல் 11 மணி வரையிலும், மாலை 5 முதல் 6 மணி வரையிலும் சுற்றுலா படகுகள், ஸ்கூபா டைவிங், படகுகள், பாய்மர படகுகளை கடல் பகுதியில் இயக்க வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது இதனிடையே இன்று அ.தி.மு.க.வினர் புதிய துறைமுக வளாகத்தில் சொகுசு கப்பலில் இருந்து பயணிகள் வரும் நேரத்தில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது.
சொகுசு கப்பல் இன்று புதுச்சேரி வருகை புதுவையில் படகுகளை இயக்க தடை விதிப்பு
0