சேலம், மே 27: ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி, சேலத்தை சேர்ந்த வாலிபரிடம் ₹6.48 லட்சம் மோசடி செய்தவர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். சேலம் மாவட்டம் பெத்தநாய்க்கன்பாளையத்தை சேர்ந்த 32 வயதான வாலிபர் ஒருவர், ஆன்லைனில் பகுதிநேர வேலைவாய்ப்பை தேடி வந்தார். அப்போது டெலிகிராம் மூலமாக அவரை தொடர்பு கொண்ட மர்மநபர், ஆன்லைனில் பகுதிநேரமாக திரைப்பட மதிப்பீடு பணி இருப்பதாக தெரிவித்தார். இதற்கு அந்த வாலிபர் ஒப்புகொண்டதால், ஒரு இணைப்பை அனுப்பி அதில் வரும் திரைப்படத்தை மதிப்பீடு செய்ய அறிவுறுத்தினார். இதற்கான ஊதியமாக, ₹600 வாலிபருக்கு கிடைத்தது.
தொடர்ந்து மற்றொரு லிங்கை அனுப்பிய மர்மநபர், அதில் முதலீடு செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம் என கூறினார். இதனை நம்பிய வாலிபர், பல்வேறு தவணைகளில் டெல்லி, குஜராத், அசாம், மத்திய பிரதேச மாநிலங்களில் உள்ள வங்கி கணக்குகளுக்கு, ₹6.48 லட்சத்தை அனுப்பி முதலீடு செய்தார். ஆனால், அதன்பின்னர் மர்மநபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் முதலீடு செய்த பணமும் திரும்ப கிடைக்கவில்லை. இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த வாலிபர், இதுகுறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.