சேலம், பிப். 27: சேலம் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த பணியாளர்களிடம் கடன்பெற்று ஏமாற்றியதாக, பெண் மேற்பார்வையாளர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள் சிலர், மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு ஒன்றை அளித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘சேலம் அரசு மருத்துவமனையில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் தூய்மை பணியாளர்களாக பணிபுரிந்து வருகிறோம். இங்கு பெண் மேற்பார்வையாளராக இருந்த ஒருவர், குடும்ப கஷ்டம் என்று கூறி, ஒப்பந்த பணியாளர்களிடம் கடனாக பணத்தை பெற்றுக் கொண்டார். ஒவ்வொரு பெண்களிடமும் தனித்தனியாக யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கூறி பணத்தை வாங்கினார்.
தற்போது கொடுத்த கடனை திரும்ப கேட்டால், உரிய பதில் அளிக்காமல் மிரட்டல் விடுக்கிறார். எனவே, நாங்கள் கொடுத்த பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றனர்.