சேலம், ஜூன் 23: சேலத்தில் நேற்று பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
தமிழகத்தில் கடந்த பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதத்தில் கடும் வெயில் நீடித்தது. அதேவேளையில் நடப்பாண்டு அக்னி நட்சத்திரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக அக்னி நட்சத்திரத்தில் ெபரும்பாலான நாட்களில் மழை பெய்தது. தொடர்ந்து கடந்த சில நாட்களாக மாலை வேளையில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில் இரு நாட்களுக்கு பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும், மாலை நேரத்தில் மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த இரு நாட்களாக சேலத்தில் பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அதேவேளையில் மாலையில் மழை பெய்து வருகிறது. நேற்று பகலில் வெயில் சுட்டெரித்தது. பின்னர் மாலை 4.30 மணியளவில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இம்மழையால் சேலம் நாராயணநகர், கருவாட்டு பாலம், கிச்சிப்பாளையம், சித்தேஸ்வரா, சாரதா கல்லூரி சாலை, பச்சப்பட்டி உள்பட பல பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.