சேலம், நவ.17: சேலம் அங்கம்மாள் காலனி பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன்(30). இவர் பள்ளப்பட்டி கோரிக்காடு பகுதியில் பருப்பு மில் நடத்தி வருகிறார். இவர் நேற்றுமுன்தினம் வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு சென்றார். நேற்று காலை வந்தபோது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது கல்லாவில் வைத்திருந்த ரூ.26ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரிந்தது. இதுபற்றி பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் கார்த்திகேயன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர்.
பின்னர் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், நள்ளிரவு நேரத்தில் பருப்பு மில்லின் ஷட்டரை உடைத்து உள்ளே நுழையும் 3 பேர், பணத்தை திருடிச்செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. அந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரித்தனர். தொடர்ந்து இதுதொடர்பாக 2 சிறுவர்கள் போலீசாரிடம் சிக்கினர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு
வருகிறது.