ஊட்டி, மே 29: நீலகிரி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களுக்கு மேலாக காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கடந்த 3 தினங்களுக்கு முன் ஊட்டி அருகேயுள்ள பைன் பாரஸ்ட் பகுதியில் மரம் விழுந்ததில், கேரள மாநிலத்தில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா வந்த சிறுவன் உயிரிழந்தார். நீலகிரி மாவட்டத்தில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பைன் பாரஸ்ட், அவலாஞ்சி, பைக்காரா, தொட்டபெட்டா, லேம்ஸ்ராக், டால்பின்நோஸ், ஊசிமலை, சூட்டிமட்டம் போன்ற சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன. மேலும், ஊட்டியில் உள்ள படகு இல்லமும் பாதுகாப்பு கருதி மூடப்பட்டது.
தாவரவியல் பூங்காவும் மூடப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் ஊட்டியில் மழை சற்று குறைந்த நிலையில், பிற்பகலுக்கு மேல் பூங்கா திறக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று பிற்பகல் வரை ஊட்டியில் மழை சற்று குறைந்து காணப்பட்ட நிலையில், ஊட்டி வந்த சுற்றுலா பயணிகள் பலரும் தாவரவியல் பூங்காவை முற்றுகையிட்டனர். சாரல் மழை மற்றும் காற்று வீசியதால், குளிர் காணப்பட்டது. எனினும், இதனையும் பொருட்படுத்தாமல், பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்காவிற்கு வந்தனர்.
மலர் கண்காட்சி முடிந்த நிலையில் தற்போது மழையும் பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் வருகை சற்று குறைந்து காணப்படுகிறது. இருப்பினும், சாதாரண நாட்களை விட தற்போது அதிகமாக சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இருந்த போதிலும், சுற்றுலா பயணிகள் பார்வையிடும் வகையில் தற்போது பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகை திறக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் இந்த கண்ணாடி மாளிகையில் உள்ள மலர் அலங்காரங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.ஊட்டியில் கன மழை பெய்து வரும் நிலையில், தாவரவியல் பூங்கா சேறும் சகதியுமாக மாறியது. இதனால், பூங்காவிற்குள் உள்ள புல் மைதானங்களில் சுற்றுலா பயணிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், புல் மைதானங்களில் அமர்ந்து ஓய்வு எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.