கே.டி.சி.நகர், ஜூன் 24: சேர்ந்தமரம் அருகே பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார். தென்காசி மாவட்டம் சேர்ந்தமரத்தை அடுத்த வீரசிகாமணி அருகே உள்ள பாறைக்குளம் கிருஷ்ணன்கோவில் தெருவை சேர்ந்தவர் சொரிமுத்து மகன் லிங்கராஜ் (50). கூலித் தொழிலாளியான இவருக்கு மனைவியும், நர்சிங் படித்து வரும் மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். லிங்கராஜ் நேற்று முன்தினம் மதியம் காய்கறிகள் வாங்குவதற்காக பைக்கில் வீரசிகாமணிக்கு சென்றார். பின்னர் வடநத்தம்பட்டி பெரியகுளம் கரை வழியாக செல்லும் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், லிங்கராஜ் பைக் மீது வேகமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இதில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்த லிங்கராஜ் பலத்த காயமடைந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து சேர்ந்தமரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லிங்கராஜை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை லிங்கராஜ் இறந்தார். இதுகுறித்து சேர்ந்தமரம் போலீசார் வழக்கு பதிந்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.