வீரவநல்லூர், ஆக.3: சேரன்மகாதேவியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் 2வது நாளாக மோதலில் ஈடுபட்டு கத்தியால் தாக்குதல் நடத்தியது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சேரன்மகாதேவியில் உள்ள ஒரு பள்ளியை சேர்ந்த சில மாணவர்களுக்கும், அப்பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியை சேர்ந்த சில மாணவர்களுக்கும் இடையே நெற்றியில் பொட்டு வைத்திருந்தது தொடர்பாக கடந்த 2 தினங்களுக்கு முன்னர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் இரு தரப்பினரும் கைகளால் தாக்கி கொண்டதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று மாலை சம்பந்தப்பட்ட பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் ரயில் நிலையத்திற்கு ரயில் ஏற சென்றுள்ளனர். அப்போது ரயில் நிலையம் அருகிலுள்ள முட்புதருக்கு அருகில் காத்திருந்த பள்ளி மாணவர்கள், பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் மீது கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 2 பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு காயம் ஏற்படவே அவர்கள் சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த சேரன்மகாதேவி போலீசார் மருத்துவமனைக்கு சென்று காயமடைந்த மாணவர்களிடம் புகார் மனுவை பெற்று விசாரனை மேற்கொண்டுள்ளனர். இதில் இரு தரப்பினரும் சிறார்கள் என்பதால் போலீசார் கூடுதல் கவனம் செலுத்தி விசாரித்து வருகின்றனர்.