வீரவநல்லூர், ஜூலை 23: சேரன்மகாதேவியில் இரு வேறு இடங்களில் நடந்த தீ விபத்தில் தீயணைப்புத்துறையினர், மின்வாரியத்தினர் விரைந்து செயல்பட்டு பெரும் விபத்தை தவிர்த்தனர். சேரன்மகாதேவி கன்னடியன் கால்வாய் கரையில் பிரசித்தி பெற்ற மிளகு பிள்ளையார் கோயில் உள்ளது. இக்கோயிலில் இருந்து நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் கரும்புகை வெளியேறியதை கண்ட அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து சேரன்மகாதேவி தீயணைப்புத் துறையினருக்கும், மின்வாரியத்திற்கும் உடனடியாக தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மின்வாரிய ஊழியர்கள் அப்பகுதியில் உடனடியாக மின் இணைப்பை துண்டித்தனர். இதனையடுத்து தீயணைப்புத்துறை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து கோயிலில் தீயை அணைத்தனர். இதில் கோயிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிரா உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் சேதமடைந்தது. இதுபோல் இரவு 7.30 மணியளவில் சேரன்மகாதேவி பேருந்து நிலையம் அருகிலுள்ள ரயில்வே கிராசிங்கை ஒட்டியுள்ள முட்புதரில் தீப்பற்றி எரிவதை அறிந்த மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக அப்பகுதியில் மின் இணைப்பை துண்டித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை முற்றிலுமாக அணைத்தனர். இவ்விரு சம்பவங்களிலும் இரு துறையினரின் துரித செயல்பாட்டால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.