கம்பம், மே 19: சேதமடைந்து காட்சியளிக்கும் கம்பம்மெட்டு சாலையால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே இந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. தமிழக பகுதியான கம்பத்திலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் கேரளாவை இணைக்கக்கூடிய கம்பம்மெட்டு உள்ளது. மொத்தம் 18 கொண்டை ஊசி வளைவுகள் உள்ள கம்பம்மெட்டு சாலை கடந்த சில மாதங்களாக குண்டு குழியுமாக காணப்படுகிறது.
இச்சாலை வழியாக நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கேரளா தமிழ்நாடு இடையே சென்று வருகின்றனர். மேலும் நூற்றுக்கணக்கான லாரிகள் தேனி மாவட்டத்திலிருந்து கனிம வளங்களை கொண்டு செல்கின்றன. சாலை குண்டு, குழியுமாக உள்ளதால் சாலை உடனடியாக மாநில நெடுஞ்சாலை துறையினர் சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.