பேரையூர், ஆக. 14: பேரையூர் தாலுகா, சேடபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று பேரையூர் டிஎஸ்பி இலக்கியா, பள்ளித் தலைமை ஆசிரியர் செந்தில்வேல், ஆகியோர் தலைமையில், மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் பூமா, ஆர்ஐ விஜயராணி, விஏஓ அமுதா, எஸ்ஐ கருப்பையா, ஆகியோர் முன்னிலையில் போதைப்பொருட்கள் தடுப்பது விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் டிஎஸ்பி இலக்கியா பேசியபோது, மாணவ, மாணவிகள், விழிப்புடன் படிப்பில் ஆர்வம் காட்டி, ஆசிரியர் கூறும் அறிவுரையின்படி, பெற்றோர்களுக்கு நற்பெயரை ஏற்படுத்தி தர வேண்டும். மேலும் புகையிலை, உள்ளிட்ட பல்வேறுப் போதைப்பொருட்கள் ரகசியமாக உங்களுக்கு நண்பர்கள் மூலமும், பிறர் மூலம் ஆசை வார்த்தைக் காட்டி உங்களுக்கு கொடுக்க வரும்போது விழிப்புடன் தவிர்த்து விடுங்கள்.
மாணவ, மாணவிகள் பயமின்றி, எந்தவொரு தீய பழக்கங்களுக்கு உட்படாமல் படிப்பில் ஆர்வம் காட்டி முன்னேற வேண்டும் என்று பேசினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியர்கள், பாண்டி, விமலா, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முதுகலை ஆசிரியர் பிரபு, உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.