பெரியகுளம் : பெரியகுளம் பகுதியில் செவட்டை மற்றும் அஸ்வினி பூச்சி தாக்குதலால் பருத்தி விவசாயம் முற்றிலும் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டு விலை குறைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.தேனி மாவட்டத்தில் பாசனம் மற்றும் மானாவாரி பயிராக அதிகளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பெரியகுளம் அதனை சுற்றியுள்ள குள்ளப்புரம், எ.வாடிப்பட்டி, கோவில்புரம், மேல்மங்கலம், காமக்காப்பட்டி, ஜெயமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 1000க்கும் மேற்பட்ட ஏக்கர் மானாவாரி நிலங்களில் கடந்தாண்டு பெய்த பருவமழையை பயன்படுத்தி விவசாயிகள் அதிகளவில் பருத்தியை பயிரிட்டு இருந்தனர். மேலும் கடந்தாண்டு ஒரு கிலோ பருத்தி விலை ரூ.100யை தாண்டியது. இதனால், இந்தாண்டு மானாவாரி விவசாயத்தில் விவசாயிகள் அதிகளவில் பருத்தியை பயிரிட்டு இருந்தனர். இந்நிலையில் பருத்தி நன்றாக வளர்ந்து பிஞ்சுகள் விட்டு காய் பருவமடையும் சூழலில் பருத்தி பயிர்களில் செவட்டை நோய் மற்றும் அஸ்வினி பூச்சிகளின் தாக்குதலால் பருத்தி பயிர்கள் முற்றிலும் சேதமடைந்து மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பருத்தி விவசாயி கூறுகையில், ‘‘பருத்தி பயிரில் ஏற்பட்ட நோய் தாக்குதலால் ஒரு ஏக்கருக்கு 1500 கிலோ பருத்தி மகசூல் எடுக்க வேண்டிய இடத்தில் 500 கிலோ பருத்தி மகசூல் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்தாண்டு ரூ.90 முதல் ரூ.100 வரை ஒரு கிலோ பருத்தி விலை போனது. இந்நிலையில், இந்தாண்டு ரூ.60 முதல் 65 ரூபாயாக விலை குறைந்ததால் இந்த ஆண்டு பருத்தி விவசாயத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு முற்றிலும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.’’ என்றனர்.இதுகுறித்து இயற்கை விவசாயிகள் கூறுகையில், ‘‘வயல்களில் கரைகள் மற்றும் இதர பகுதிகளில் புற்கள், செடிகள் முளைத்து அதன் மூலம் உற்பத்தியாகும் தத்துப்பூச்சி, பச்சை காய்புழு, அந்துப்பூச்சி, பச்சை கூண்வண்டு, இளஞ்சிவப்பு காய்புழு, புருட்டோனியா புழு ஆகிய சேதத்தை ஏற்படுத்தும். இவை பருத்தி செடியில் உள்ள பூ, பிஞ்சு, காய்களையே அதிகம் தாக்கி சேதப்படுத்தும். எனவே விவசாயிகள் கூடுதல் கவனம் செலுத்தி இனகவர்ச்சி பொறி, வைரஸ் நுண்ணுயிர் மூலம் புழுக்களை கட்டுப்படுத்தும் முறை மற்றும் வேளாண் துறையினரின் உரிய ஆலோசனைப்படி பூச்சி மருந்துகளை தெளித்து கவனித்து பராமரிக்க வேண்டும்.’’ என்றனர்.இதுகுறித்து வேளாண் துறையினர் கூறியதாவது, ‘‘கூண்வண்டு, வேர்புழுக்களால் பாதிக்கப்பட்ட பருத்தி செடிகளை உடனடியாக வேருடன் புடுங்கி அப்புறப்படுத்தி நோய் பாதிப்புகளை குறைக்க வேண்டும்.பருத்தி செடியிலுள்ள பூச்சிகளின் முட்டைகள், சிறியளவில் வளர்ந்த புழுக்கள், பாதிக்கப்பட்ட பூக்கள், காய்கள், செடிகளை கண்டுபிடித்து அப்புறப்படுத்தியும் நோய் தாக்குதலை குறைக்கலாம். மழைக்காலத்தில் கூடுதல் கவனம் செலுத்தி பராமரித்தால் பருத்தி விவசாயத்தில் அதிக லாபம் பெறலாம்’’ என்றனர்.மேலும், வேளாண் அதிகாரிகள் கூறியதாவது: பருத்தியில் தத்துப்பூச்சி தாக்குதலும் சற்று அதிகமாக உள்ளது. பருத்தி சாகுபடி செய்துள்ள உழவர்களின் தங்கள் பருத்தியில் தத்துப்பூச்சி தாக்குதல் ஏற்பட்டுள்ளதா என பயிரினை நன்கு கண்காணிக்க வேண்டும். இதற்கான அறிகுறிகள் தத்துப்பூச்சிகள் இலையில் சாற்றை உறிஞ்சும். இலையில் அதனால் சுருக்கங்கள், மேடுபள்ளங்கள் காணப்படும். மஞ்சள் நிறம் இலையின் ஓரங்களில் இருந்து பரவும். கருகலும் ஓரங்களில் இருந்து ஆரம்பித்து பரவும். தத்துப்பூச்சியால் தாக்கப்பட்ட செடியின் இலைகள் காய்ந்து விழுவதால், செடியின் வளர்ச்சி தடுக்கப்படும். பருத்தி தத்துப்பூச்சியினால் பாதிக்கப்பட்டால், ஏக்கருக்கு 40 கிராம் தயாமீதாக்சம் அல்லது இமிடாகுளோபிரிட் ஏக்கருக்கு 40 மில்லி தெளித்து கட்டுப்படுத்தலாம்.இவ்வாறு இளம் பயிரில் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்துவதன் மூலம் செடிகள் வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டு அதிக மகசூல் பெறலாம். மருந்துக் கரைசலைத் தெளிக்கும்போது பயிரில் நன்கு படிவதற்காக வேளாண்மைக்கான திரவ சோப்புகளில் ஒன்றினை (சாண்டோவிட், பைட்டோவெட், ஸ்டிக்கால், இன்ட்ரான்-வணிகப் பெயர்கள்) ஒரு லிட்டர் மருந்துக் கரைசலுக்கு கால் மில்லி வீதம் சேர்த்துக் கலக்கிக் கொள்ள வேண்டும்.விவசாயிகள் இதை கடைப்பிடிக்க வேண்டும்.’’ என்றனர்….