கோவை, ஆக. 21: கோவை செல்வபுரம் ஹயாத்துல் இஸ்லாம் சுன்னத் ஜமாத் மகாசபை கூட்டம் பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள மதரஸா அரங்கில் நேற்று முன்தினம் நடந்தது. கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் தலைவர் பஷீர்அகமது தலைமை தாங்கினார். இதில், ஹயாத்துல் இஸ்லாம் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் புதிய தலைவராக இப்ராகீம், செயலாளராக ஹைதர்அலி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக, ஜமாத் நிர்வாகத்தின் வரவு-செலவு கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இது குறித்து, புதிய தலைவர் இப்ராகீம் கூறுகையில், ‘‘சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் இந்த ஜமாத் மதரசா விரிவாக்கம் மற்றும் பள்ளிவாசல் நிர்வாக பணிகளை சிறப்பாக செய்து வருகிறோம். சாதி, மத பேதமின்றி அனைத்து மக்களுக்குமான சமூக வளர்ச்சி பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். செல்வபுரம் பகுதியில் ஏராளமான சிறுபான்மையின மக்கள், ஏழ்மை நிலையில் உள்ளனர். அவர்களது வாழ்வு மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களை அமல்படுத்த உள்ளோம். மேலும், அவர்களது குழந்தைகளின் கல்விச்செலவுக்கு, தமிழ்நாடு அரசு உதவ வேண்டும்’’ என்றார்.