Wednesday, July 16, 2025
Home மகளிர்சிறப்பு கட்டுரைகள் செல்லுலாய்ட் பெண்கள் – 52

செல்லுலாய்ட் பெண்கள் – 52

by kannappan
Published: Updated:

நன்றி குங்குமம் தோழிஇந்தித் திரையுலகு கொண்டாடிய தென்னகத்தின் முதல் கனவுக்கன்னி வைஜெயந்திமாலாகாதளவோடிய கண்கள், கண்ணுக்கினிய தோற்றம் போலவே காதுக்கும் இனிமை சேர்க்கும் குரல் வளம். ஆறடி அழகுப் பதுமையாய், எழிலும் கவர்ச்சியும் மின்ன இந்தித் திரையுலகைக் கட்டி ஆண்ட பெருமைக்குரியவர் நாட்டியத் தாரகை வைஜெயந்தி மாலா. தமிழ்த் திரையுலகில் அழகிய நடிகைகள் பலர் இருந்தாலும் உயரமான நடிகையர் என எடுத்துக் கொண்டோமென்றால், அந்த எண்ணிக்கை மிக மிகக் குறைவு. அவர்களில் வைஜெயந்தி முதன்மையானவர். இப்போது வரை அவரது ரசிகர்கள் வைஜெயந்தியின் பெயரைச் சொன்னால் ஐஸ்க்ரீமாய் கரைந்து உருகி வழியத் தயாராய் இருக்கிறார்கள். சாமுத்ரிகா லட்சணம் பேசும் அழகின் இலக்கணத்துக்கு மிகப் பொருத்தமானவர் வைஜெயந்தி மட்டுமே என்று பட்டிமன்றம் நடத்தவும் தயாராய் இருப்பவர்கள் அவர்கள். வைஜெயந்தியின் அழகில் மயங்காதவர்கள் யார்? பெண்களே மயங்கும் பேரழகுப் பதுமையல்லவா வைஜெயந்தி மாலா….. !  பள்ளி மாணவப் பருவத்திலேயே கதாநாயகியாகும் வாய்ப்பைப் பெற்றவர். தாயைப் போலவே இவரும் தமிழில் மிகச் சொற்பமாக 13 படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் பெரும் புகழை அறுவடை செய்தவர். அப்போதைய பெரும் திரைப்பட நிறுவனங்களும், திரையுலக ஜாம்பவான்களும் இவரை வைத்துப் படமெடுப்பதை லட்சியமாகவே கொண்டிருந்தார்கள். வைஜெயந்தியும் அவர்களால் வளர்ந்தார். பரஸ்பரம் அவர்களும் வைஜெயந்தியால் வளர்ந்தார்கள்.ட்ரீம் கேர்ள் ஆஃப் சவுத் இவருக்கு முன்னதாக இந்தித் திரையுலகில் தமிழகத்தின் முதல் கனவுக்கன்னியாய் அறியப்பட்ட டி.ஆர். ராஜகுமாரி ஜொலித்தாலும், தென்னகத்தின் முதல் கனவுக்கன்னி என்று இந்தி சினிமாவுலகு கொண்டாடும் அளவு பேரும் புகழும் பெற்றவர் வைஜெயந்தி. இப்போதும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் அழகுப் பெண்மணி. 80 வயதைக் கடந்துவிட்ட பின்னும் நடனத்தின் மீதான காதல் சற்றும் குறையாமல் தன் நாட்டியத்தைத் தொடர்ந்து ஆடி வருபவர். கலாஷேத்ராவில் வைஜெயந்தி ஆடுகிறார் என்றால், இளம் நாட்டியக் கலைஞர்களுக்கு எந்தளவு கூட்டம் சேருமோ அதற்குச் சற்றும் குறையாமல் இப்போதும் கூட்டம் திமிறுகிறது. அந்த அளவு ரசிகர்களைத் தன் ஆட்டத்தால் கட்டிப் போட்டு வைத்திருப்பவர். 1949ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி, தெலுங்கு, இந்தி என அடுத்தடுத்து தன் கலைப் பயணத்தைத் தொடர்ந்தவர்.  மற்ற மொழிகளைக்காட்டிலும் இந்தியில் நிலையான ஒரு இடத்தைத் தனக்கென தக்க வைத்துக் கொண்டதுடன், இந்தி நடிகைகளுக்குச் சவாலாகவும் திகழ்ந்தவர். இந்திய மாநிலங்கள் அனைத்தும் கொண்டாடும் ’ட்ரீம் கேர்ள் ஆஃப் சவுத்’ (Dream Girl of South) என்று இந்தியப் பத்திரிகைகள் வைஜெயந்தியைக் கொண்டாடிக் களித்தன. மதராசப் பட்டணம் பெற்றெடுத்த பெருமைக்குரியவர் வேதவல்லியின் பூர்வீகம் மைசூர் மாகாணம், மண்டையம் என்றாலும் அவரது படிப்பு, திருமண வாழ்க்கை அனைத்தும் அவரது தந்தையின் பணியின் பொருட்டு மதராஸில் அமைந்தது. வேதவல்லியை மணந்து கொண்ட எம்.டி.ராமன் அப்போதைய மராமத்து இலாகாவில் பணியில் இருந்தவர். (இந்த இலாகா, பின்னர் அறிஞர் சி.என்.அண்ணாதுரை தலைமையில் அமைந்த திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் பொதுப்பணித் துறை என்று பெயர் மாற்றம் பெற்றது. கலைஞர் கருணாநிதி அத்துறையின் அமைச்சராகப் பொறுப்பேற்றார் என்பதும் வரலாறு) அரைக்காசு உத்தியோகம் என்றாலும் அரசு உத்தியோகம் அப்போது மிக உயர்வாகக் கருதப்பட்ட ஒன்றல்லவா? இந்த வேதவல்லியே திரையுலகுக்காக வசுந்தரா தேவியாகப் பெயர் மாற்றம் பெற்றார். 1940களில் புகழ் பெற்ற நட்சத்திரமாக ஜொலிக்கவும் செய்தார். வேதவல்லி –எம்.டி.ராமன் இணையரின் அன்புக்கும் ஆசைக்கும் பாத்திரமாக ஆகஸ்ட் 13, 1933ல் சென்னை திருவல்லிக்கேணியில் பிறந்தவர் வைஜெயந்தி மாலா. தாயார் வசுந்தரா தேவி 1940களில் விரல் விட்டு எண்ணிச் சொல்லும் அளவுக்கு நான்கு படங்களில் (ரிஷ்ய சிருங்கர், மங்கம்மா சபதம், உதயணன் வாசவதத்தா, நாட்டியராணி) மட்டுமே தமிழ்ப் படங்களில் நடித்திருந்தாலும், 400 படங்களில் நடித்ததற்குரிய பேரையும் புகழையும் சம்பாதித்தவர். ‘தீபாவளி’ என்று சொந்தப் படம் தயாரிக்க நினைத்து அது, புஸ்வாணமாகிப் போனாலும், இன்றுவரை ரசிகர்கள் நினைவில் நிற்பவர். 50களில் அவர் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. 60களில் தாயும் மகளும் இணைந்து ‘இரும்புத்திரை’ படத்தில் தாயும் மகளுமாகவே நடித்தார்கள். தமிழ்த் திரையுலக வரலாற்றில் வெறும் ஐந்து படங்களில் மட்டுமே நடித்துப் பெயர் பெற்றவர் வசுந்தரா தேவி. திரையுலகில் தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடியையும் தாண்டிப் பாய்ந்து இந்திய அளவில் புகழ் மிக்க நட்சத்திரமாய் மின்னியது. இசையும் நடனமும் கற்றுத் தேர்ந்த கலைவாணிசர்ச் பார்க் கான்வென்ட், குட் ஷெப்பர்ட் பள்ளி, பிரசன்டேஷன் கான்வென்ட் என வைஜெயந்தியின் படிப்பு புகழ் பெற்ற பல பள்ளிக்கூடங்களில் தொடர்ந்தது. தாயார் வசுந்தரா தேவி கர்நாடக இசைப் பாடகியாகவும், நடிகையாகவும் இருந்ததால் வைஜெயந்திக்கு இசையும் நடனமும் கற்பிக்கப்பட்டது. பிரபல நட்டுவனார் வழுவூர் ராமையாப் பிள்ளையிடம் நடனம் கற்பதற்காகச் சேர்த்து விடப்பட்டார். நடனம் அவரது கால்களுக்கு இயல்பாகப் படிந்து வந்தது. ஐந்து வயதில் வாடிகன் நகரில் 1940ல் தன் தாய் வசுந்தரா பார்வையாளராய் இருக்க, போப்பாண்டவர் முன்பாக நடனம் ஆடியதுடன், அவரிடமிருந்து ஆசிகளையும் பெற்றவர். 13 வயதில் முறையாக அரங்கேற்றமும் நிகழ்த்தப்பட்டது. திரையுலகில் நடிகையாகப் புகழ் பெறுவதற்கு முன்னதாகவே திறமை வாய்ந்த நடனக் கலைஞராக அறியப்பட்டவர் வைஜெயந்தி. ஐக்கிய நாடுகள் சபை முதன் முதலில் அழைப்பு விடுத்த இந்திய நடனமணியும் வைஜெயந்தியே என்பது குறிப்பிடத்தக்கது. 1969 ஆம் ஆண்டில் அழைப்பின் பேரில் அங்கு சென்று நடன நிகழ்ச்சியை நடத்தி விட்டுத் திரும்பியிருக்கிறார். அத்துடன் மணக்கால் சிவராஜ அய்யரிடம் கர்நாடக இசையும் கற்றுத் தேர்ந்தார். பிரபலமான நடனமணியாக அறியப்பட்ட அளவுக்கு அவர் பாடகியாகப் பிரபலமாகவில்லை. வைஜெயந்தியின் இந்தத் திறன்களுக்கெல்லாம் பின்புலமாகவும், மகள் வசுந்தராவையும் பேத்தி வைஜெயந்தியையும் ஆட்டுவிக்கும் சூத்திரதாரியாகவும் இருந்தவர் அவரது பாட்டி யதுகிரி அம்மாள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. பின் நாளில் தன் பாட்டி யதுகிரி பற்றி வைஜெயந்தி மாலா பெருமையுடன் பேசியும் ‘Bonding…. A Memoir’ என்னும் நூலாக எழுதியும் இருக்கிறார். ‘வாழ்க்கை’யின் நாயகியானார் வைஜெயந்திவழக்கமாக ஏ.வி.மெய்யப்பச் செட்டியார் தன் படங்களுக்கான நாயகிகளைப் பெரும்பாலும் நடன அரங்குகளிலேயே கண்டுபிடித்துத் திரையுலகுக்கு அழைத்து வந்து அறிமுகப்படுத்தியவர். ‘லக்ஸ்’ பத்மா, குமாரி ருக்மணி, லலிதா, பத்மினி என்று பலரையும் அதற்கு நல்ல உதாரணங்களாகச் சொல்லலாம். ஏ.வி.எம். மின் இணை இயக்குநரான எம்.வி.ராமன், ‘விக்டோரியா பப்ளிக் ஹாலில் நடிகை வசுந்தரா மகள் நாட்டிய நிகழ்ச்சி இருக்கிறது. போய்ப் பார்க்கலாம் வாருங்கள்’ என்று மெய்யப்பச் செட்டியாரிடம் சொல்ல, இருவரும் இணைந்து நிகழ்ச்சியைப் பார்க்கச் செல்கிறார்கள். 16 வயது இளம் பெண் வைஜெயந்தியின் அருமையான நடனமும், நெடுநெடுவென்ற வளர்த்தியும் அந்த வயதிலேயே 20 வயதுப் பெண் போன்ற அவரது தோற்றமும் செட்டியாரை வெகுவாகக் கவர, தான் அடுத்து தயாரிக்க இருக்கும் படத்துக்கு இந்தப் பெண்ணையே நாயகியாக்குவது என்ற முடிவுக்கும் வருகிறார். (இப்போதும் ரிப்பன் மாளிகை அருகில் கம்பீரமான சிவப்புக் கட்டடமாக ஓங்கி உயர்ந்து நிற்கிறது விக்டோரியா பப்ளிக் ஹால். அந்தக் காலத்தில் பொது நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் கலையரங்காகவும் அது திகழ்ந்தது.)  மாதம் 2350/ ரூபாய்க்கு மூன்றாண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப் படுகிறார். மூன்றே மாதத்தில் ‘வாழ்க்கை’ படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து படம் தணிக்கைக்கும் போய்ச் சேர்கிறது. 1949 டிசம்பர் 22 ஆம் நாள் வெளியான ‘வாழ்க்கை’ திரைப்படம் வைஜெயந்தி மாலாவின் வாழ்க்கையிலும் பெரும் திருப்பத்தையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தியது. சென்னை பாரகன் தியேட்டரில் 25 வாரங்கள் பிரமாதமாக ஓடி, ஏ.வி.எம். நிறுவனத்துக்கும் வெற்றியை ஈட்டித் தந்தது. அதுவரை ஏ.வி.எம். செட்டியார் தன் ஸ்டுடியோவை தேவகோட்டை ரஸ்தாவில் நடத்தி வந்தார். சென்னை வந்து வடபழனியில் ஸ்டுடியோ ஆரம்பித்து, எடுக்கப்பட்ட முதல் படமும் ‘வாழ்க்கை’ தான். தமிழில் மட்டுமல்லாமல், 1950ல் தெலுங்கில் ‘ஜீவிதம்’, 1951ல் இந்தியில் ‘பஹார்’ என அடுத்தடுத்து மும்மொழிகளிலும் வைஜெயந்தி மாலாவே நாயகியாக நடித்தார். மூன்று மொழிகளிலும் படம் பெரு வெற்றி பெற்றது. இதில் குறிப்பிடத்தக்க ஒரு செய்தி என்னவென்றால், பள்ளியில் படித்துக்கொண்டே வைஜெயந்தி இந்தப் படங்களில் நடித்து முடித்து விட்டார். அதேபோல, வாழ்க்கை, பஹார், ஜீவிதம் மூன்று படங்களுமே ஏ.வி.எம். தயாரிப்பு என்பதால் சென்னை ஏ.வி.எம்.ஸ்டுடியோவிலேயே படப்பிடிப்புகள் நடத்தி முடிக்கப்பட்டன. இந்திப் படப் பிடிப்புக்காக பம்பாய்க்குப் பயணிக்க வேண்டிய தேவையில்லாமல் போனதால், பள்ளிப் படிப்பும் தடையில்லாமல் நடந்தது. பதினாறு வயது பள்ளி மாணவி வைஜெயந்தி, ஒரு கல்லூரி மாணவியாக வேடமேற்று நடித்ததன் மூலம் எல்லோரையும் அதிசயித்துப் பேசவும் வைத்தார். தானே தேடி வந்த அகில இந்திய நட்சத்திர அந்தஸ்து தமிழைப் போலவே இந்தி ‘பஹார்‘ டெல்லியில் வெளியாகி சக்கைப்போடு போட்டது. அதிலும் குறிப்பாக பாம்பாட்டி கிராமிய நடனம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. உற்சாக மிகுதியில் வட நாட்டு ரசிகப் பெருமக்கள், தங்கள் கைகளில் வைத்திருந்த சில்லறைக் காசுகளைத் திரையில் தோன்றிய வைஜெயந்தியின் பிம்பத்தின் மீது வீசியெறிந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். அதை நேரில் கண்டு வியந்து போன வட நாட்டுத் திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவர், நேராக சென்னை வந்து வைஜெயந்தியை நேரில் சந்தித்துப் பேசியதுடன், தான் அடுத்துத் தயாரிக்கவிருக்கும் இந்தித் திரைப்படத்தில் நடிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். அத்துடன், ஒரு லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் போட்டதுடன் நில்லாமல், கையில் ஐம்பதாயிரம் முன் பணமாகவும் கொடுத்தார். வைஜெயந்தி அன்றே அகில இந்திய நட்சத்திரமாக உயர்ந்து விட்டார். ஒரு லட்சம் என்பதெல்லாம் அப்போது பல கோடி ரூபாய் மதிப்பு மிக்க தொகை. ‘பஹார்’ அவரை அகில இந்திய நட்சத்திர அந்தஸ்தை நோக்கி உந்தித் தள்ளியது. தொடர்ச்சியாக அவர் நடித்த பல படங்கள் தமிழ், இந்தி, தெலுங்கு என வெளியாக பன்மொழி நாயகியாகவும் பரிணமிக்கத் தொடங்கினார்.பன்மொழிப் படங்களின் நாயகிஏ.வி.எம் தன் அடுத்த தயாரிப்பான ‘பெண்’, ’சங்கம்’ ’லட்கி’ தமிழ், தெலுங்கு, இந்தி மூன்று மொழிப் படங்களைத் தயாரித்தது. பெண்ணிய நோக்கில் சொல்லப்பட்ட கதை இது. சாதி மறுப்புத் திருமணத்தில் பிறந்த தன் தோழியின் (அஞ்சலி தேவி) வாழ்க்கைக்காக, அவளது காதல் கணவனின் (ஜெமினி கணேசன்) சந்தேகங்களிலிருந்து தன் தோழியை விடுவிக்கத் தன் காதலனுடன் இணைந்து போராடும் போராளிப் பெண்ணாக இப்படங்களில் வைஜெயந்தி நடித்திருப்பார். மூன்று மொழிகளில் கதாநாயகர்கள் மாறினாலும், கதாநாயகியும், தோழியும் மாற்றமில்லாமல் வைஜெயந்தியும் அஞ்சலி தேவியும் நடித்தார்கள். இப்படத்தில் வைஜெயந்தி மாலாவின் பல்வேறு தோற்றங்களில் தோன்றும் நடனக் காட்சிகள்,  வாளை ஆயுதமாகக் கொண்டு போர்ப்பரணி பாடும் வீராங்கனை, எழுதுகோலை ஆயுதமாய்க் கொண்ட எழுத்தாளினி என இரு வேறு தோற்றங்களில் ஒரு குழு நடனத்தையே மேடையில் நிகழ்த்திக் காண்பிப்பார் வைஜெயந்தி மாலா. வைஜெயந்தி மாலாவின் காதலராகக் குறும்பு கொப்பளிக்கத் தோன்றி பல்வேறு கோமாளிக் கூத்துகளை நிகழ்த்துவார் எஸ்.பாலச்சந்தர். தன் ஆரம்ப காலத்தில் திரைப்பட இயக்கம், தயாரிப்பு, நடிப்பு, திரை இசை என்று சினிமாவுடன் ஒன்றிப் போயிருந்த பாலச்சந்தர், பின்னர் வீணை வித்வானாக மட்டும் மாறிப் போனது துயரம். இப்படத்தில் இவருக்கு நடிகர் சந்திரபாபு ஒரு பாடலுக்கு இரவல் குரலில் பாடியிருக்கிறார். அது ‘உல்லாசமாகவே…. உலகத்தில் வாழவே…’ எனத் தொடங்கும் கேலிப் பாடல்… இப்பாடலுக்கு நன்றாகவே நடனமும் ஆடி அசத்தியிருப்பார் பாலச்சந்தர். ‘லட்கி’ இந்திப்படமே (1953) முதலில் வெளியானது. அடுத்த ஆண்டில் (1954) சங்கம், பெண் என இரு படங்களும் வெளியாயின. இப்படத்தின் ஆரம்பக் காட்சியில் குதிரை மீது ஏறி அமர்ந்து, அதனை விரட்டியவாறே, ‘அகில பாரத பெண்கள் திலகமாய் அவனியில் வாழ்வேன் நானே’ என்று கம்பீரமாக அறிவித்தவாறே பாடிக் கொண்டு வருவார் வைஜெயந்தி. (இந்தப் பாடலை நான் பள்ளியில் பாடி ஆடியிருக்கிறேன் என்பது கொசுறுத் தகவல்). ஏ.வி.எம். படங்களில் மூன்றாண்டுகள் ஒப்பந்தம் செய்யப்பட்ட காலத்தில், குதிரைச் சவாரியையும் அங்கேயே கற்றுத் தேர்ந்திருக்கிறார் வைஜெயந்தி மாலா.  இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் அக்காலத்து ஹிட் பாடல்கள். குறிப்பாக, அஞ்சலி தேவியும் வைஜெயந்தியும் பாடும், ‘சொன்ன சொல்லை மறந்திடலாமோ வா…வா…வா.. உன் சுந்தர ரூபம் மறந்திடப் போமோ வா…வா..வா..’ என்றும் நினைவில் நிற்கும் பாடல். அத்துடன் சாதி மறுப்புத் திருமணம் சமூகத்தில் எவ்வளவு மூர்க்கமாக எதிர்க்கப்படுகிறது என்பதைக் காட்சிப்பூர்வமாக அற்புதமாக விளக்கிய படமும் கூட. ஆனால், அதை எல்லாம் எதிர்த்துத் திருமணம் செய்துகொண்டு, இறுதியில் வாழ்வில் ஒன்றிணையும் தம்பதிகள் மூலம் அதை எதிர்க்கும் சமூகத்துக்கு நல்ல பாடம் கற்பித்த படமும் கூட.    ஜெமினி நிறுவனத்தின் ஒப்பந்த நாயகியாக….   வைஜெயந்தி மாலாவை அறிமுகம் செய்து ஏ.வி.எம். தந்த வெற்றிப் படங்களின் நீட்சியாக, ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசனும் தன் படங்களில் வைஜெயந்தி மாலாவை நடிக்க வைக்க விரும்பினார். அவரும் தமிழ், தெலுங்கு இந்தி என மூன்று மொழிகளில் படமெடுப்பதில் கவனம் செலுத்தி வந்தவராயிற்றே. பிரம்மாண்டம், இசை, நடனம், அரச குடும்ப வாரிசு தொலைந்து போய் மீளுதல், ஆண்டான், அடிமைகள் என கலவையாக ஒரு படத்தை எடுத்து வெளியிட முடிவெடுத்தார் ஜெமினி எஸ்.எஸ்.வாசன். ‘சந்திரலேகா’ என்ற பிரம்மாண்டத்துக்கு முன் ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ உண்மையிலேயே மிரள வைக்கும் ஒரு தயாரிப்பு என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இரு படங்களையும் ஒப்பிடவே கூடாது; ஒப்பிடவும் முடியாது. கடலில் பயணிக்கும் கப்பல், குமுறிக் கொந்தளிக்கும் கடலின் சீற்றத்தில் கப்பல் சிதறி சின்னாபின்னமாவது என்று காட்சிகள் மலைக்க வைத்தவை.   உண்மையில் இந்தப் படத்தை எம்.ஜி.ஆரை. வைத்து எடுக்கவே எஸ்.எஸ்.வாசனும் விரும்பினார். ஆனால், எம்.ஜி.ஆரோ தன் சேமிப்புகள் அனைத்தையும் கொட்டி ‘நாடோடி மன்னன்’ படத்தில் கவனம் செலுத்திக் கொண்டிருந்ததால், ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ மீது கடைக்கண் பார்வையைக் கூட செலுத்த முடியாமல் இருந்தார். எனவே, ஜெமினி கணேசன் வஞ்சிக்கோட்டையின் வாலிபனாய் அவதாரம் எடுத்தார். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பெரும் ஹிட் என்றால், அதில் ஹைலைட் ‘கண்ணும் கண்ணும் கலந்து’ பாடல். போட்டியாளர்களாக நடிப்பு மட்டுமல்லாமல், அற்புதமான நடனத் திறனும் வாய்ந்தவர்களான  பத்மினியும் வைஜெயந்தியும் ஆடும் கெட்ட ஆட்டம். அவர்கள் இருவரும் நடித்த படங்களில் எல்லாம் தப்பாமல் நாட்டியமாடும் வாய்ப்பும் அவர்களுக்கு அமைந்தது. தனித்து ஆடித் தங்கள் திறமையை வெளிப்படுத்தியதுடன், போட்டி போட்டுக் கொண்டு அசுரத்தனமான ஓர் ஆட்டத்தையும் இருவரும் ஆடியதை அன்றைய ரசிகர்கள் மட்டுமல்லாமல் இப்போதைய ரசிகர்களும் திறந்த வாய் மூடாமல் தொலைக்காட்சியிலும் அடுத்தக் கட்டப் பரிணாமமாக யூட்யூபிலும் பார்த்து வியக்கும் அளவுக்கு அற்புதமான ஓர் ஆட்டத்தை ஆடியவர். ’சபாஷ்…. சரியான போட்டி’ என்று வில்லன் பி.எஸ்.வீரப்பா, சிலாகித்துப் பேசும் வசனமும் வைஜெயந்தியின் பொருட்டு பெரும் புகழ் பெற்றது.சற்றேறக் குறைய ஒன்பது நிமிடங்களுக்கு நீளும் அந்த ஆட்டம், இருவரின் கலை வாழ்வில் எண்ணி எண்ணி மகிழக்கூடியது என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. இந்த நடனக் காட்சிக்காக இருவரும் இணைந்து ஆடியது இரண்டு நாட்கள் என்றால், வைஜெயந்தியின் நடன அசைவுகளையும், தனிப்பட்ட நடிப்புக் காட்சிகளையும் பன்னிரெண்டு நாட்கள் எடுத்திருக்கிறார்கள். திரைப்படங்களில் நடனப் போட்டிக் காட்சிகள் இடம் பெறுவது இந்தப் படத்துக்குப் பின்னர்தான் அதிகமாயிற்று. இந்தப் பாடல் காட்சியின் சிறப்பம்சமே தங்கள் முழுத் திறனையும் வெளிப்படுத்தி ஆடிய நாயகியர் இருவரில், இறுதியில் யார் வெற்றி பெற்றார்கள் என்று சொல்லாமல் விட்டதுதான். சொல்லாமல் விடப்படும் செய்தி எப்போதும் திறன் வாய்ந்தது என்பதுடன், ரசிகர்களின் விருப்பம் போல, அவரவர் ரசனைக்கேற்றவாறு இருவரில் வென்றவர் யாரென்பதை அவரவர்களே ஊகித்துக் கொள்ளலாம். தென்னகக் கனவுக்கன்னி அடுத்த இதழிலும் தொடர்வார்.(ரசிப்போம்!)

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi