சேலம், அக்.29: சேலம் சரகத்தில் சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, சிவப்பு விளக்கு சிக்னல் மீறுவது, அதிகபாரம் ஏற்றுவது, சரக்கு வாகனத்தில் பொதுமக்களை ஏற்றுவது போன்ற சாலை விதிமீறில்களில் ஈடுபடுவோரின் உரிமம் ரத்து செய்யப்பட்டு வருகிறது. இதேபோன்று செல்போன் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டுவது, போதையில் வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட விதிகளை மீறுவோருக்கும் 3 மாதம் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டு வருகிறது. அந்தந்த மாவட்ட போலீசார், விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது வழக்கு பதிவு செய்து வருகின்றனர். இதேபோல், சேலம், தர்மபுரி மாவட்டத்தில் வாகன விபத்துகளை தடுக்கும் வகையில் செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டியவர்களின் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி கடந்த 9மாதத்தில் 533 பேரின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘வாகன விபத்துகளை குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்ைககள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சேலம், தர்மபுரியில் கடந்த 9 மாதத்தில் செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய 533பேரின் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சாலைவிபத்தில் உயிரிழப்ைப ஏற்படுத்திய 303பேரின் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்,’’ என்றனர்.