ஈரோடு, மார்ச் 4: ஈரோடு நாடார்மேடு பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (25). கூலி தொழிலாளி. இவர், கடந்த 27ம் தேதி இரவு நாடார்மேடு பகுதியில் அவரது நண்பருடன் செல்போன் பேசியபடி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த 3 பேர், கார்த்தியின் செல்போனை பறித்து கொண்டு தப்பினர். இதுகுறித்து கார்த்தி ஈரோடு தெற்கு போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில், செல்போன் பறிப்பில் ஈடுபட்டது ஈரோடு மூலப்பாளையத்தை சேர்ந்த சூரியபிரகாஷ் (25),ஈரோடு டீசல் செட் பகுதியை சேர்ந்த ராமு(31), நாடார் மேடு விநாயகர் கோவில் 9வது வீதியை சேர்ந்த பூபதி (25) ஆகிய 3 பேர் என்பது தெரியவந்தது. இதையடுத்து சூரியபிரகாஷ், ராமு, பூபதி ஆகிய 3 பேரையும் நேற்று முன்தினம் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து கார்த்தியின் செல்போனை பறிமுதல் செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.