புதுடெல்லி: ராஜஸ்தான் ஸ்ரீகங்காநகரில் வசிப்பவர் பவன் குமார் சோனி (55), விவசாயி. அதே பகுதியில் எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்துள்ளார். இவர் தனது கணக்கிற்கு மகன் ஹர்ஷ்வர்தனின் (26) செல்போன் எண்ணை கொடுத்திருந்தார். கடந்த மாதம் 7ம் தேதி, ஹர்ஷ்வர்தனின் செல்போனுக்கு கேஒய்சி புதுப்பிப்பு லிங்க் ஒன்று எஸ்எம்எஸ்சில் வந்துள்ளது. அதை ஹர்ஷ்வர்தன் அழுத்தியதும், மோசடி ஆப் ஒன்று அவரது மொபைலில் தாமாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில், ஹர்ஷ்வர்தன் வங்கி ஆன்லைன் பயனர் ஐடி மற்றும் பாஸ்வோர்ட் பதிவு செய்துள்ளார். சிறிது நேரத்திலேயே 4 பரிவர்த்தனைகளில் பவன் குமார் சோனி வங்கி கணக்கில் இருந்து ரூ.8 லட்சம் எடுக்கப்பட்டது.அதிர்ச்சி அடைந்த ஹர்ஷ்வர்தன் தந்தை சோனியிடம் தகவல் தெரிவித்துள்ளார். இந்த பணம் கிசான் அட்டை மூலம் சோனி கடன் பெற்றிருந்தார். உடனடியாக சோனி, வங்கி கிளைக்கு சென்று மேலாளரிடம் விஷயத்தை கூறி உள்ளார். அவர் ஆய்வு செய்து பார்த்ததில் பேயு நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் மற்றும் ரூ.1.24 லட்சமும், சிசிஅவென்யு நிறுவனத்திற்கு ரூ.1.54 லட்சமும், ஆக்சிஸ் வங்கிக்கு ரூ.25,000மும் மாற்றப்பட்டுள்ளது. இந்த நிதி நிறுவனங்களுக்கும் வங்கி மேலாளர் தகவல் தெரிவித்துள்ளார். பேயு, சிசிஅவென்யு இரு நிதி நிறுவனங்களும் ஆன்லைனில் கொள்முதல் செய்யும் போது வாங்குபவரிடமிருந்து பணம் சேகரித்து வணிகரின் வங்கி கணக்கு பணத்தை திருப்பி செலுத்தும். சைபர் குற்றவாளிகள் அதில் வணிகர்களாக பதிவு செய்து, மோசடியாக பணத்தை பரிமாற்றம் செய்துள்ளனர். சோனியின் புகாரைத் தொடர்ந்து உடனடியாக அந்த பரிவர்த்தனைகளை இரு நிதி நிறுவனமும் நிறுத்தி வைத்தன. விவசாயி சோனி உடனடியாக புகார் அளிக்க சென்ற போது போலீசார் முதலில் ஏற்கவில்லை. பிறகு உயர் அதிகாரிகளை சந்தித்து முறையிட்ட பிறகே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சைபர் செல்லிலும் 3 நாள் தாமதத்திற்கு பிறகே பேயு நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் சோனிக்கு இழந்த பணத்தில் ரூ.6.24 லட்சம் திரும்ப கிடைத்தது. மற்ற நிறுவனங்களுக்கு போலீசார் தாமதமாக கடிதம் அனுப்பி னர். இதனால், ரூ.25,000 மற்றும் ரூ.1.54 லட்சத்தை சைபர் குற்றவாளிகள் கொல்கத்தாவில் உள்ள ஏடிஎம் மற்றும் சில கடைகளில் பொருள் வாங்கி செலவு செய்தது மட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு விவசாயியான தன்னாலேயே குற்றவாளிகள் எந்த கணக்கிற்கு பணத்தை மாற்றினர் எந்த தகவல்களை சேரிக்க முடியும் போது, சைபர் கிரைம் போலீசார் மெத்தனமாக செயல்படுவது ஏன் என விவசாயி சோனி அதிருப்தி தெரிவித்துள்ளார்….