நன்றி குங்குமம் டாக்டர் இதுபோன்ற ஒரு சங்கடத்தை சிலர் அனுபவித்திருக்கலாம். உடலில் ஏதோ ஒரு விஷயம் சரியில்லாதது போன்ற உணர்வு தோன்றும். கழுத்தில் சிறு வலியும் வீக்கத்தையும் உணரலாம். அதன் தொடர்ச்சியாக தலைவலியும் தொற்றிக் கொள்ளும். சில நிமிடங்களில் தலைவலி காணாமல் போகும். இது ஏன் என்று யோசித்திருக்கிறீர்களா? இதற்குப் பெயர் Cervicogenic headache’’ என்கிற பிசியோதெரபி மருத்துவர் செந்தில்குமார், அதுபற்றி விரிவாக விளக்குகிறார்.‘‘ஒற்றைத் தலைவலியின்போது தலை முழுவதும் அல்லது தலையின் ஒரு பகுதி முழுவதும் வலி இருக்கும். ஆனால்,; செர்விகோஜெனிக் தலைவலி கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். கழுத்து வலியுடன் சிறு எரிச்சலாகத் தோன்றும். ஏதாவது ஒரு வாசனை, அதிக சத்தம், அதிர்ச்சி, மன அழுத்தம் மற்றும் பிடிக்காத விஷயங்கள் நடக்கும்போதும் செர்விகோஜெனிக் தலைவலி தொற்றிக் கொள்ளும். அடுப்படியில் அதிகம் நேரம் வேலை பார்க்கும் பெண்கள், அழகுக்கலைஞர்கள், அதிக நேரம் பயணிப்பவர்கள், டெய்லரிங், எம்ப்ராய்டரி வேலையில் உள்ள பெண்களுக்கும் இந்த வலி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். செர்விகோஜெனிக் தலைவலி இருக்கும்போது குமட்டல் உண்டாகும், வாந்தி ஏற்படும், ஒரு வித எரிச்சலும் உண்டாகும். எந்த வேலையையும் முழுமையாகச் செய்ய முடியாது. கையில் தோள்பட்டை பகுதியிலும் வலி உண்டாகும். கழுத்துப் பகுதியில் பலமிழந்தது போல சோர்வாகவும் இருக்கும். இது சில சமயம் பெண்களுக்கு மன அழுத்தத்தையும் உண்டாக்கும். தலைவலி மட்டும் இல்லாமல் இதுபோன்ற பிரச்னைகளும் இருந்தால் கண்டிப்பாக மருத்துவரை அணுகிப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.’’செர்விகோஜெனிக் தலைவலிக்கு என்ன சிகிச்சை?‘‘தலைவலி ஏற்படும் சூழல்களைத் தவிர்ப்பது அவசியம். அதிக நேரம் வெயிலில் இருப்பது, வெப்பமான சூழலில் வேலை செய்வது, அதிக சத்தம் கேட்பது, ஒவ்வாத பெர்ஃப்யூம் வாசனைகளைத் தவிர்ப்பது போன்றவை முக்கியம். அடர் வண்ணங்கள், இரவு நேரப் பயணம் என எதனால் உங்களுக்குத் தலைவலி ஏற்படுகிறது என்பதைப் புரிந்துகொண்டு அந்த சூழல்களைத் தவிரக்க வேண்டும். ஆண்களில் ஓட்டுநர் வேலை பார்ப்பவர்களுக்கும் இது போன்ற பிரச்னை உண்டாகலாம். ஆரம்ப கட்டத்தில் சிறிய கழுத்து வலியும் சில நிமிடத் தலைவலியும் இருக்கும். அப்போது ஃபேன் அருகில் அமர்ந்தும், ஒரு காபி குடித்தும் அதைச் சரி செய்து கொள்ள முடியும். நாட்கள் செல்ல செல்ல இந்தத் தலைவலி அரை மணி நேரம் வரை நீளும். தலைவலியில் துவங்கி உடல் முழுக்க வலியை உண்டாக்கும். எந்த வேலையும் செய்ய எனர்ஜி இல்லாதது போலச் சோர்வாக உணரச் செய்யும். மன உளைச்சலையும் ஏற்படுத்தும். எரிச்சலூட்டும் மன நிலைக்குக் காரணம் ஆகும். மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொண்டால் செர்விகோ ஜெனிக் ஹெடேக்கில் இருந்து விடுபடலாம். முதலில் இதற்கு வலி நிவாரணி மாத்திரைகள் கொடுக்கப்படும். இந்த மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரைப்படி குறிப்பிட்ட காலத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் இந்தத் தலைவலியிலிருந்து விடுபடலாம். செர்விகோஜெனிக் ஹெடேக் கண்டுகொள்ளாமல் விடும்போது; கழுத்தைச் சுற்றிலும் வலி முடிச்சுக்கள் ஏற்படும். இதற்கான Triggering தெரபியின் மூலம் வலி முடிச்சுக்கள் குணப்படுத்தலாம். இந்தச் சிகிச்சையில் வலி முடிச்சுக்கள்; தூண்டப்பட்டு சரி செய்யப்படும். தொடர் சிகிச்சைகள் எடுத்துக் கொள்வதன் மூலம் செர்விக்கோஜெனிக் தலைவலியிலிருந்து விடுபடலாம்.’’ தொகுப்பு: யாழ் ஸ்ரீதேவி
செர்விக்கோஜெனிக் தலைவலி
82
previous post