புதுக்கோட்டை, மே 20: புதுக்கோட்டை மாவட்டம், செரியலூர் கரம்பக்காடு முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் நேற்று நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் கரம்பக்காடு கிராம காவல் தெய்வமான முத்துமாரியம்மன் கோயில் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை கொடி ஏற்றி, காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. திருவிழா நாட்களில் அம்மன் அலங்கார ஆராதனைகளுடன் மலர் அலங்கார வாகனங்களில் வீதி உலாவும், வான வேடிக்கைகள் கலை நிகழ்ச்சிகளும் அன்னதானமும் நடத்தப்பட்டு வருகிறது. நேர்த்திக்கடன் செய்துள்ள பக்தர்கள் பால் குடம் எடுத்து தரிசனம் செய்தனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை நடந்தது. தொடர்ந்து நேற்று மணிக்கு காய், கனி, மலர்கள், தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் முத்துமாரியம்மன்வீற்றிருக்க வானவேடிக்கைகளுடன் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று 21 ந் தேதி செவ்வாய் கிழமை தீர்த்தத் திருவிழாவும், நாளை 22 ந் தேதி புதன் கிழமை தெப்பத் திருவிழாவும் நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை விழாக்குழுவினரும், பாதுகாப்பு ஏற்பாடுகளை கீரமங்கலம் போலீசார் செய்துள்ளனர்.