ஸ்ரீபெரும்புதூர்: செரப்பணஞ்சேரி கிராமத்தில் 20 பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. தாம்பரம் அடுத்த மணிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எரப்பணஞ்சேரி கிராமத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். மேலும், இப்பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மாணவர்கள், அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.
தற்போது, ஏழ்மை நிலையில் உள்ள பழங்குடியின மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், மணிமங்கலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அசோகன், 20 மாணவர்களுக்கு புத்தகப்பை, பேனா, நோட்டு புத்தகம் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கி ஊக்கப்படுத்தினார். அப்போது, அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதாக தெரிவித்தார். மேலும், கல்வியின் அவசியம் குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் எடுத்துரைத்தார். நிகழ்வின்போது, மணிமங்கலம் காவல் நிலைய போலீசார் மற்றும் கிராம மக்கள் உடனிருந்தனர்.