செய்யாறு, நவ.19: நீரிழிவு நோய்க்கு சிகிச்சை அளிக்காவிட்டால் கடுமையான பாதிப்பு ஏற்படும் என பொதுமக்களுக்கு மருத்துவர் அறிவுரை வழங்கினார். செய்யாறு அருகே நாட்டேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நீரிழிவு நோய் வார விழிப்புணர்வு தினத்தை ஒட்டி நீரிழிவு நோய் விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மருத்துவர் யோகேஸ்வரன் தலைமை தாங்கி பேசியதாவது: ஒருவருடைய உடல் இன்சுலினை பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்தாத போது அல்லது இன்சுலினை உற்பத்தி செய்ய இயலாத போது ஏற்படுகிற நிலையே நீரிழிவு நோய்.
உடலில் இன்சுலின் அளவு குறையும்போது மற்றும் உடல் இன்சுலினை எதிர்க்கும் போது ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இது சிறுநீரகத்திலுள்ள ரத்த நாளங்களை சேதப்படுத்துகிறது. நீரிழிவு நோய் அதிகரித்தால் தாகம், பசி, அடிக்கடி சிறுநீர் கழித்தல், சோர்வு, மங்கலான பார்வை, மெதுவாக குணமாகும் காயங்கள், கை அல்லது கால்களின் உணர்வின்மை அல்லது கூச்ச உணர்வு, விவரிக்க முடியாத எடை இழப்பு, எரிச்சல் அல்லது மனநிலை மாற்றங்கள் காணப்படும்.
மேலும், நீரிழிவு நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் நரம்பு பாதிப்பு, பார்வை இழப்பு மற்றும் சிறுநீரக நோய் போன்ற கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் கே.சம்பத், செவிலியர்கள் புவனேஸ்வரி, சிவரஞ்சனி, சத்தியா, ரேவதி, கோமதி, ஜெயப்பிரதா, ஆய்வக நிபுனர் பிரபுதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.