செய்யாறு, ஜூன் 25: செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா சின்ன ஏழாச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வன்(48), சாலை பணியாளர். இவரது மனைவி சசிகலா. இவருக்கு உதயகுமார் என்ற மகனும் கீர்த்தனா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 10 மணி அளவில் குடும்பத்தோடு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் பீரோ திறக்கும் சத்தம் கேட்டு எழுந்து பார்த்தபோது பீரோ இருந்த அறையில் இருந்து சிலர் தப்பி ஓடினர்.
உடனே செல்வன் குடும்பத்தினர் கூச்சல் போடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் உதவியுடன் திருட வந்த நபர்களை பிடிக்கச் சென்றபோது அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். வீட்டினுள் வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 14 சவரன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து செல்வன் நேற்று தூசி போலீசில் புகார் அளித்தார். சப் இன்ஸ்பெக்டர் பழனிவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.