விழுப்புரம், ஆக. 6: அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் மாஜி கலெக்டர் பழனிச்சாமி விழுப்புரம் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கௌதமசிகாமணி உள்ளிட்ட 7 பேர் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன. 2006 முதல் 2011 வரை கால கட்டத்தில் வானூர் அருகே பூத்துறையில் விதிகளை மீறி அளவுக்கு அதிகமாக செம்மண் வெட்டி எடுத்ததாகவும், இதனால் அரசுக்கு ரூ.28 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும் வருவாய்த்துறை அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கில் மொத்தம் 67 சாட்சிகள் சேர்க்கப்பட்ட நிலையில் 45 சாட்சிகளிடம் விசாரணை முடிவடைந்துள்ளது.
இந்நிலையில் நேற்று நீதிபதி பூர்ணிமா முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்த போது அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கௌதமசிகாமணி, ராஜமகேந்திரன் ஆகியோர் ஆஜராகவில்லை. சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத் ஆகியோர் ஆஜராகினர். அரசு தரப்பு சாட்சியான அப்போதைய மாவட்ட ஆட்சியராக இருந்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பழனிச்சாமி நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். இதனை நீதிபதி பூர்ணிமா பதிவு செய்து கொண்டார். பின்னர் அவரிடம் எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து வழக்கு விசாரணை இன்றைய தினம் (6ம் தேதி) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.