குன்றத்தூர், அக்.20: செம்பரம்பாக்கம் ஏரி பகுதியில் ₹1.68 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய மீன் குஞ்சுகள் வளர்ப்பு நிலையத்தினை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார். செம்பரம்பாக்கம் ஏரி அமைந்துள்ள வளாகத்தின் ஒரு பகுதியில் மீன் குஞ்சு வளர்ப்பு பணிகள் 400 சதுர மீட்டர் பரப்பளவில் நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மீன் உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு கூடுதலாக 1260 சதுர மீட்டர் பரப்பளவு உள்ள இடத்தில் புதிய மீன் குஞ்சு வளர்ப்பு கட்டமைப்பை உருவாக்கும் பட்சத்தில் மீன் குஞ்சு உற்பத்தி மற்றும் நீர் நிலைகளில் மீன் உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதை கருத்தில் கொண்டு, ₹1 கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் 3 புதிய மீன் குஞ்சு வளர்ப்பு தொட்டி சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்டது.
அத்துடன் ஆறு மீன் குஞ்சு நாற்றங்கால் தொட்டி புனரமைத்தல் பணிகளும், வண்ண மீன்கள் மற்றும் வட மாநிலத்தில் உள்ள மீன்களை இங்கு கொண்டு வந்து உற்பத்தி செய்வது உள்ளிட்ட பணிகளும் சமீபத்தில் நிறைவடைந்தது. அதன் திறப்பு விழா காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு, ₹1.68 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய மீன் வளர்ப்பு நிலையத்தினை திறந்து வைத்தார்.
அப்போது பூண்டி, புழல் போன்ற ஏரிகளில் மீன்கள் வளர்ப்பது போன்று ஏன் செம்பரம்பாக்கம் ஏரியில் மீன்கள் வளர்ப்பது இல்லை என்று அதிகாரிகளிடம் கேள்வி கேட்டார். அதற்கு, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கப்படுவதால் மழைக்காலங்களில் மதகுகளில் வழியாக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் மீன்கள் வெளியே செல்ல வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து அமைச்சர், ‘இந்த பகுதியில் மீன்களை பிடித்து விற்பனை செய்யும் குடும்பத்தினர் நூற்றுக்கணக்கானோர் உள்ளனர். அவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்’ என்றார்.
தற்போது, இந்த மீன் விதை பண்ணை மூலம் மீன்களை வளர்த்து, மீன் பண்ணை விவசாயிகளுக்கு குறைந்த விலையில் மீன் விரலிகள் கிடைக்கும். தற்போது, 7.50 லட்சம் மீன் விரலிகள் கூடுதலாக உற்பத்தி செய்யப்படும் எனவும், 12 லட்சம் மீன் விரலிகளை உள்ளூர் மற்றும் வெளியூர் மாவட்ட மீன் உற்பத்தியாளர்களுக்கு விநியோகம் செல்வதன் மீன் உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. இவ்விழாவில், ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை, காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன், குன்றத்துார் ஒன்றியக்குழு உறுப்பினர் சரஸ்வதி மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.