செம்பனார்கோயில், ஜூன் 25: மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில், ஆறுபாதி, பரசலூர், மேமாத்தூர், கீழ்மாத்தூர், கிள்ளியூர், மாத்தூர், முக்கரும்பூர், காளகஸ்திநாதபுரம், மடப்புரம், ஆக்கூர், முடிகண்டநல்லூர், மேலப்பாதி, திருச்சம்பள்ளி, கருவாழக்கரை, கஞ்சாநகரம், கீழையூர், தலச்சங்காடு, கிடாரங்கொண்டான் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விவசாயிகள், பருத்தி சாகுபடி செய்தனர். தற்போது பல்வேறு இடங்களில் பருத்தி அறுவடை செய்யும் நிலையில் உள்ளது.
இதனால் செம்பனார்கோயில் பகுதி விவசாயிகள், கடந்த சில நாட்களாக பருத்தியை அறுவடை செய்து வருகின்றனர். தற்போது அறுவடை செய்யப்படும் பருத்திக்கு உரிய விலை கிடைக்க விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்திக்கு சரியான விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து பருத்தி சாகுபடி விவசாயிகள் கூறுகையில், ஆண்டுதோறும் பருத்திக்கு உரிய விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சாகுபடி செய்து வருகிறோம். ஆனால் நடப்பாண்டு சாகுபடி செய்யப்பட்ட பருத்திக்கு, ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் சரியான விலை கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்துள்ளோம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு பருத்திக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது திடீர் திடீரென மழை பெய்து வருகிறது. இதனால் ஒரு சில இடங்களில் பருத்தி பஞ்சு நனைந்து பாதிக்கப்படுகிறது. இதன்காரணமாக சாகுபடி செய்த செலவு தொகையாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு மழைக்கு முன்னர் பருத்தி பஞ்சை தீவிரமாக அறுவடை செய்கிறோம் என்றனர்.