செம்பனார்கோயில், ஆக.22: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, செம்பனார்கோயில் அருகே கடக்கம் ஊராட்சியில் வீரபாண்டி குளம் உள்ளது. இந்த குளத்தின் வடக்கு கரையில் பம்பு செட்களுக்கு செல்லும் மும்முனை மின் இணைப்புள்ள மின்கம்பம் உள்ளது. தற்போது இந்த மின்கம்பம் சாய்ந்து குளத்தில் உள்ள தண்ணீரில் விழும் அபாயமுள்ளது. அவ்வாறு மின்கம்பம் சாய்ந்து குளத்து தண்ணீரில் விழுந்தால் குளத்து தண்ணீரை பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் உயிர் பலியாகும் சநிலை ஏற்படும்.
விவசாயிகளும் குளத்திற்கு பின்புறமுள்ள வயல்களில் பயிர்களுக்கு உரம், பூச்சிமருந்து, களையெடுப்பு, அறுவடை பணிகளுக்கு செல்ல அச்சப்படுகின்றனர். வடகிழக்கு பருவமழை தொடங்கினால் புயல் மற்றும் சூறைக்காற்று வீசக்கூடும். அப்போது சாய்ந்து நிற்கும் மின்கம்பம் கண்டிப்பாக குளத்து தண்ணீரில் சாய்ந்து விபத்தை ஏற்படுத்தும். எனவே பருவமழை துவங்குவதற்கு முன்பாக சாய்ந்த மின்கம்பத்தை சீரமைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.