சென்னை, ஆக. 31: சென்னை ரிப்பன் மாளிகையில் மாதாந்திர மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் பிரியா மற்றும் துணை மேயர் மகேஷ்குமார் தலைமையில் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்துக்கு மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் அண்மையில் கலைஞரின் நினைவு தினத்தையொட்டி நடைபெற்ற அமைதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட 149வது திமுக மாமன்ற உறுப்பினர் ஆலப்பாக்கம் சண்முகம் பேரணியில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது, திடீரென நெஞ்சுவலி காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அந்தவகையில், மறைந்த ஆலப்பாக்கம் சண்முகத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
அதன்படி, ராமலிங்கம் (ஆளுங்கட்சி தலைவர் – திமுக) நொளம்பூர் ராஜன் (திமுக), சாந்தகுமாரி (திமுக), சாமுவேல் திரவியம் (காங்கிரஸ்), ஜீவன் (மதிமுக), ரேணுகா (சிபிஐ), ஜெயராமன் (சிபிஎம்), கோபிநாத் (விசிக), உமா ஆனந்த் (பாஜக), பாத்திமா முகமது ( இந்திய யூனியன் முஸ்லீம் லீக்), கிரிதரன் (அமமுக) உள்ளிட்ட அனைத்து கட்சியின் மாமன்ற உறுப்பினர்களும் இரங்கல் தீர்மனத்தின் மீது பேசினர். இதனையடுத்து மேயர் பிரியா மற்றும் துணை மேயர் மகேஷ் குமார் ஆகியோர் மாமன்ற உறுப்பினர் ஆலப்பாக்கம் சண்முகத்தின் நினைவுகளை இக்கூட்டத்தின் வாயிலாக பகிர்ந்து கொண்டனர். முன்னதாக மறைந்த உறுப்பினர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தும் மாமன்றத்தின் மரபு படி இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டு மீண்டும் கூட்டம் நாளை (இன்று) நடைபெறும் என கூறி ஒத்திவைக்கப்பட்டது.