திருவொற்றியூர்: சென்னையில் புதிதாக போடப்படும் சாலைகளில் ஓராண்டுக்கு பள்ளம் தோண்டுவதற்கு சென்னை மாநகராட்சி தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் புதிதாக ேபாடப்படும் சாலைகள் பாதுகாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மாநகரத்தை பொறுத்தவரை, பூமிக்கு மேல் இருப்பதை காட்டிலும், பூமிக்கு அடியில் தான் அத்தனை விஷயங்கள் ஒளிந்திருக்கின்றன. மின்சார இணைப்பு, டெலிபோன் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு, மழைநீர் வடிகால் இணைப்பு, குடிநீர் இணைப்பு, இணையதள வயர்கள், மெட்ரோ ரயில் எனப் பல திட்டங்கள் பூமிக்கு அடியில் தான் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அவற்றில் முக்கியமானது மழைநீர் வடிகால் திட்டம். ஏனெனில், பருவமழையின் போது தினம்தோறும் கொட்டித் தீர்க்கும் மழையால் சாலை, தெருக்களில் தண்ணீர் தேங்காமல் வடிகால்கள் வழியே கால்வாய்கள், ஆறுகளுக்குச் சென்று, கடலில் கலக்க வேண்டும் என்பதே திட்டத்தின் நோக்கம். திமுக தேர்தல் அறிக்கையில், ஒரு மழைக்கே மிதக்கும் சென்னையை மாற்றி காட்டுவோம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், முதல்கட்டமாக சென்னையில் மழை வெள்ள பாதிப்பை தடுப்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிக முக்கியத்தும் கொடுத்து திட்டங்களை செயல்படுத்த உத்தரவிட்டார். இதற்காக ஒரு குழுவையும் நியமித்தார். அவர்கள் கொடுத்த அறிக்கையின் படி, கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு இப்பணிகளை வேகமாக முடிக்க முதல்வர் உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில், சென்னை முழுவதும் பல்வேறு கட்டங்களாக மழைநீர் வடிகால் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது. அதன் எதிரொலியாக கடந்த வடகிழக்கு பருவமழையின் போது மழைநீர் எங்கும் தேங்காத நிலை ஏற்பட்டது. இது சென்னை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அந்த அளவுக்கு படுவேகமாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. மக்கள் மத்தியில் இந்த திட்டம் பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இந்த மழைநீர் வடிகால் பணிகளால் பல இடங்களில் தோண்டப்பட்ட பள்ளங்களால் ஏராளமான சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்பட்டது. இது தொடர்பான புகார்களும் தொடர்ந்து சென்னை மாநகராட்சிக்கு வந்தது. எனவே சென்னை முழுவதும் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதேநேரம் அப்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி கடந்த ஜனவரி மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது. ஏனென்றால் மழை காலத்தில் சாலைகள் போடப்பட்டால் அவை தரமாக இருக்காது என வல்லுநனர்கள் கருதியதால், அப்போது சாலைகள் அமைக்கும் பணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
இதை தொடர்ந்து கடந்த 2 மாதங்களாக சென்னை முழுவதும் சேதமடைந்த சாலைகள் கணக்கெடுக்கப்பட்டு, அவற்றை சீர் செய்யும் வகையில், புதிதாக சாலை பணிகள் முழு வீச்சில் தொடங்கப்பட்டது. இப்பணிகள் அனைத்தும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இரவு நேரங்களில் வேகமாக நடந்து வருகிறது. அதன்படி, ெசன்னையில் தற்போது ரூ.367.85 கோடியில் புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இது ஒருபுறம் இருக்க மெட்ரோ ரயில் பணிகளும் சென்னையில் முழு வீச்சில் நடந்து வருகிறது. மேலும் விடுபட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால், குடிநீர் பைப்லைன், மின்சார வாரியம் போன்ற மற்ற துறை சார்பிலும் அடிக்கடி பள்ளம் தோண்டுவதால் புதிதாக போடப்படும் சாலைகள் மீண்டும் குண்டும் குழியுமாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் அசவுகரியம் குறித்து மக்கள் சென்னை மாநகராட்சிக்கு தொடர்ந்து புகார் அளித்து வந்தனர்.
இதை தடுத்தால் தான் சென்னையில் புதிதாக போடப்படும் சாலைகளை பாதுகாக்க முடியும் என்பதால், அதற்காக சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது, சென்னையில் புதிதாக அமைக்கப்படும் சாலைகளில் ஒரு ஆண்டுக்கு பள்ளம் தோண்டுவதற்கு சென்னை மாநகராட்சி தடை விதித்துள்ளது. அதன்படி, எந்த ஒரு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் புதிதாக போடப்பட்ட சாலையில் பள்ளம் தோண்டக் கூடாது என்று சென்னை மாநகராட்சி தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னை குடிநீர் வாரியம், மின்சார வாரியம் உள்ளிட்ட அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் இது தொடர்பான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, சென்னை மாநகர குடிநீர் வாரியம், சென்னை மின்சார வாரியம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் இது பொருந்தும் என்ற சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: சென்னையில் மின்வாரியம், குடிநீர் வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் சாலைக்கு அடியில் குழாய் மற்றும் மின் வயர்கள் உள்ளிட்டவைகள் பதிக்கப்படுகிறது. இந்த பணிகளை சென்னை மாநகராட்சியுடன் இணைந்து அந்த துறைகள் செயல்படுத்த வேண்டும். ஏனென்றால் ஒரு இடத்தில் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றால் அங்கு அமைக்கப்பட்டிருக்கும் சாலைகள் பாதிக்கப்படுகிறது. மீண்டும் அவற்றை சீர் செய்யும் பணி கால தாமதமாக நடைறுகிறது.
இதனால் அந்த சாலையை பயன்படுத்தும் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏற்கனவே சென்னை மாநகராட்சிக்கு புகார் தெரிவித்தோம். தற்போது சென்னையில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. சில இடங்களில் புதிதாக அமைக்கப்பட்ட சாலைகளில் கூட மற்ற துறையினர் அந்த சாலைகளில் மீண்டும் பள்ளம் தோண்டுவதால், புதிய சாலைகள் சேதமடைகிறது. அவற்றை மீண்டும் சீரமைப்பது என்பது கேள்விக்குறியாக உள்ளது. எனவே, இதை தடுக்க தற்போது சென்னை மாநகராட்சி புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக கூறியுள்ளனர். அதை தீவிரமாக செயல்படுத்தினால் மட்டுமே புதிதாக போடப்படும் சாலைகளை பாதுகாக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.