சென்னை, மே 8: சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்களில் அடுத்த சில வாரங்களில் 16,000 மரக்கன்றுகள் நட முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மாநகராட்சியை சிறந்த மாநகராட்சியாக மாற்றுவதற்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறார். சென்னை மாநகராட்சி முழுவதும் தற்போது 786 பூங்காக்கள், 104 சாலை மையத்தடுப்பு பூங்காக்கள், 113 போக்குவரத்து தீவுத்திட்டுகள் மற்றும் 163 சாலையோர பூங்காக்கள் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்த 786 பூங்காக்களில் ஒப்பந்த முறையில் 584 பூங்காக்களும், 145 பூங்காக்கள் சென்னை மாநகராட்சி பூங்கா பணியாளர்கள் மூலமும், 57 பூங்காக்கள் பொதுமக்கள் தத்தெடுப்பு முறையிலும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
தற்போது, சென்னையில் ஒவ்வொரு மழை காலங்களிலும், பல மரங்கள் முறிந்து விழுகின்றன. மேலும், மெட்ரோ, பாலம் கட்டுதல், சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பணிகளுக்காக சென்னையில் பல மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னையில் பசுமை பரப்பை அதிகரிக்க மரக்கன்றுகளை நட அறிவுறுத்தினார். அதன் பேரில் மேயர், துணை மேயர், வார்டு உறுப்பினர்கள், மண்டலக்குழு தலைவர்கள் தங்கள் வார்டுக்குட்பட்ட பகுதிகளில் 5 முதல் 6 அடி நீளமுள்ள மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர்.
இதேபோல், சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன் தீப் சிங் தலைமையில் சென்னை மாநகராட்சி அதிகாரிகளும் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பூங்காக்களில் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக சென்னையில் உள்ள பூங்காக்களில் 16,000 மரக்கன்றுகள் விரைவில் நடப்பட உள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி ஆலோசனையின் படி, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பூங்காக்களை தரம் உயர்த்தி வருகிறோம். மேலும், கோடைக் காலங்களில் குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக பூங்காக்களை வண்ணமயமாக மாற்றி வருகிறோம். இதுவரை, பூங்காக்களில் உள்ள இருக்கை, மரங்கள், சுவர்கள், தரைகளுக்கு வண்ணம் தீட்டி பார்வைக்கு அழகு சேர்க்கும் வகையில் பணி செய்துள்ளோம்.
இதே போன்று பூங்காக்களில் மரம் நடும் பணிகளிலும் ஈடுப்பட்டு வருகிறோம். இதற்காக 16,000 மரக்கன்றுகளை மாநகராட்சி சார்பில் வாங்கப்பட்டு, 15 மண்டலங்களுக்கும் தேவையின் படி வழங்கப்பட்டுள்ளது. இந்த மரங்கள் அடுத்த சில வாரங்களில் நட்டு வைக்கப்படும். மேலும், மாநகராட்சி பூங்காக்கள் ஒப்பந்த அடிப்படையில் பராமரிக்கப்படுகின்றன. இதில் ஒருவர் பல பூங்காக்களை ஒப்பந்தம் செய்து முறையாக பராமரிக்கவில்லை எனவும், குறிப்பிட்ட ஓப்பந்ததாரருக்கு மட்டும் அதிக பூங்காக்கள் ஒப்பந்தம் கிடைக்கிறது எனவும் வந்த புகாருக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது. அந்த ஒப்பந்தங்கள் கடந்த மாதமே முடிந்தது. இனி ஒரு தொகுப்பில் அதிகப்பட்சம் 10 பூங்கா வரை இடம்பெறும். அதில் குறிப்பிட்ட ஒரு ஒப்பந்ததாரர் குறிப்பிட்ட தொகைக்குள் ஒப்பந்தம் எடுக்கும் வகையில் கொண்டு வரப்படும். இந்த கோடையில் குழந்தைகள் பூங்காக்களில் மனநிறைவோடு நேரத்தை செலவிடுவார்கள்,’’ என்றார்.