சென்னை, ஜூலை 9: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 11ம் வகுப்பு பயிலும் மாணவர்களில் முதற்கட்டமாக 521 மாணவர்கள் கல்விச் சுற்றுலா சென்றனர். மேயர் பிரியா நேற்று ரிப்பன் கட்டிட வளாகத்தில், மாணவர்கள் செல்லும் பேருந்துகளை கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். சென்னை மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கையின்போது, மேயர் பிரியா உரையில் அறிவிப்பு 23ல் சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி மட்டுமல்லாமல், பள்ளி படிப்பின்போதே உலகளாவிய அறிவை பெறும் நோக்கில் கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள் என அறிவித்தார்.
மேலும், 2023-24ம் கல்வியாண்டில் சென்னை பள்ளிகளில் 11ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியரின் பள்ளி கல்விக்குப் பின் அவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டும் வகையில், ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில், 2023-23ம் கல்வியாண்டில் சென்னை பள்ளிகளில் 11ம் வகுப்பு பயிலும் சுமார் 5200 மாணவர்களை பிர்லா கோளரங்கம், பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், அண்ணா நூற்றாண்டு நூலகம், (அல்லது) அம்பத்தூர், மாதவரம் மற்றும் சோழிங்கநல்லூர் ஆவின் பால் தொழிற்சாலைகள் (அல்லது) சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்கள் (அல்லது) தக்ஷினா சித்ரா அருங்காட்சியகம் போன்ற இடங்களைப் பார்வையிட ஜூலை மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான 5 மாதங்களில் 15 கட்டங்களாக அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டது.
முதற்கட்டமாக, டி.எச். சாலை சென்னை மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த 270 மாணவர்கள், பட்டேல் நகர் சென்னை மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த 100 மாணவர்கள், கல்யாணபுரம் சென்னை மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த 50 மாணவர்கள் மற்றும் அப்பாசாமி லேன் சென்னை மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த 101 மாணவர்கள் என மொத்தம் 521 மாணவர்கள் 10 பேருந்துகளில் பிர்லா கோளரங்கம், பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையம் மற்றும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பார்வையிட நேற்று அழைத்துச் செல்லப்பட்டனர்.
மேயர் பிரியா நேற்று ரிப்பன் கட்டிட வளாகத்தில், மாணவர்கள் செல்லும் பேருந்துகளை கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். இதர மாணவர்கள் வருகிற நவம்பர் வரை 14 கட்டங்களாக கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள். நிகழ்வின் போது, துணை ஆணையர் ஷரண்யா அறி, நிலைக்குழுத் தலைவர் (கல்வி) விஸ்வநாதன், கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில், சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 46 பள்ளிகளை சீரமைக்க ₹50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி அமைப்பில் பெண்களுக்கு அதிகாரம்
நிகழ்ச்சியில் மேயர் பிரியா கூறியதாவது: சென்னை புறநகரில் இருந்து மாநகராட்சியுடன் புதிதாக 139 பள்ளிகள் இணைக்கப்பட்டு உள்ளது. இதில் மிகவும் சேதமடைந்த 46 பள்ளிகள் கண்டறியப்பட்டு சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் பள்ளிகளை சீரமைக்க ₹50 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. விரைவில் டெண்டர் அறிவிக்கப்பட்டு, பணிகள் தொடங்க உள்ளது. திமுக கடைபிடிக்கும் சமூகநீதி கொள்கை தான் மாமன்னன் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகளின் சரிபாதி இடங்களில் பெண்கள் தான் பொறுப்புகளில் உள்ளனர். கட்சியில் இதுவரை நான் ஏற்றத்தாழ்வை எதிர்கொண்டதில்லை. திமுகவில் ஏற்றத்தாழ்வு ஏதும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
வடிகால் தூர்வாரும் பணிகள் தீவிரம்
மழைநீர் வடிகால் பணிகளை பொறுத்தவரை கடந்த ஆண்டு முதல் தொடர்ச்சியாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. செப்டம்பர் 15ம் தேதிக்கு முன் மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். தாமதமாக பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்களுக்கு முதலில் நோட்டீஸ் வழங்கப்படும். பின்னர் அபராதம் விதிக்கப்படும், தூர் வாரும் பணிகளை பொறுத்தவரை ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம்.