சென்னை, நவ.15: சென்னையில் நேற்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், மழை பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க அவசர உதவி எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் மழை பெய்ய தொடங்கி உள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. மேலும், புறநகர் பகுதிகளான செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் தொடங்கிய கனமழை விட்டுவிட்டு தொடர்ந்து பெய்து வருகிறது. சென்னையில் மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை, கோட்டூர்புரம், தி.நகர், சைதாப்பேட்டை, தரமணி, வேளச்சேரி, ராயப்பேட்டை, மந்தைவெளி, பட்டினம்பாக்கம், திருவல்லிக்கேணி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, கோவிலம்பாக்கம், கீழ்க்கட்டளை, எழும்பூர், சேத்துப்பட்டு, புதுப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், ராயப்பேட்டை உள்பட பல்வேறு பகுதிகளிலும் பலத்த காற்றுடன் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
சென்னையில் விடாது மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மிதமான மழை பெய்து வருவதால் முக்கிய சாலைகள் எங்கும் மழைநீர் தேங்கவில்லை. வடிகால்கள் மூலம் வேகமாக மழைநீர் வடிந்து வருகிறது. தொடர்ந்து கனமழை பெய்யும் பட்சத்தில் மழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில் ஏற்கனவே சென்னை மாநகராட்சி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நிவாரண முகாம்கள், பல்வேறு வகையான இயந்திரங்கள், மரங்கள் விழுந்தால் அவற்றை அகற்றும் இயந்திரங்கள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சென்னையில் மழை நீரால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்புகொள்ளும் வகையில், 1913 என்ற இலவச உதவி எண்ணை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இந்த எண்ணில் தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் புகார்களை பதிவு செய்யலாம். மேலும், 044 25619206, 044 25619207, 044 25619208 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சமூக வலைதளங்களில் புகார் தெரிவிக்கும்போது #ChennaiCorporation அல்லது #ChennaiRains என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர வாட்ஸ்அப் வாயிலாக 94454 77205 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
குடிநீர், கழிவுநீர் புகாருக்கு
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, சென்னை குடிநீர் வாரியம் சார்பில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரை அகற்றுதல் தொடர்பான புகார்களை தெரிவிக்க கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் இயங்கும். எனவே பொதுமக்கள், கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறை 044-45674567 (20 இணைப்புகள்) மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1916 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம். மேலும், 300 தூர்வாரும் இயந்திரங்கள், 66 கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்கள், 176 ஜெட்ராடிங் வாகனங்கள் என மொத்தம் 542 கழிவுநீரகற்றும் இயந்திரங்கள் பணிகளில் ஈடுபடுத்தப்படும். குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றும் பணிகளை 2,149 களப்பணியாளர்கள் மேற்கொள்வார்கள்.