சென்னை, செப்.4: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்ய பிரத்யேக குழு அமைக்கப்பட்டுள்ளது, என தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார். சென்னையில் ஆண்டுதோறும் பருவமழை காலத்தில் தண்ணீர் தேங்குவது பெரிய பிரச்னையாக உள்ளது. எனவே, சென்னை முழுவதும் வடிகால் பணிகளை மேற்கொண்டு, மழைநீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
மேலும், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நீர்நிலைகளை தூர்வாருதல், மழைநீர் வடிகால்களை சீரமைப்பது உள்ளிட்ட பணிகள் வேகமெடுத்துள்ளன. தினசரி ஒவ்வொரு பகுதியாக சென்று இந்த பணிகளை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மேலும், பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். சென்னையில் மழைநீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து, அங்கு, ரூ.762 கோடி மதிப்பில் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. வடசென்னை கொசஸ்தலை ஆற்று வடிநில பகுதிகளில் 484 கிலோ மீட்டர் தொலைவுக்கு பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
இதேபோல், தென்சென்னை பகுதியில் 22 கிலோ மீட்டர் வரை பணிகள் நிறைவடைந்துள்ளன. சென்னையின் 15 மண்டலங்களிலும் ரூ.28 கோடி மதிப்பில் நடைபெற்றுவரும் மழைநீர் வடிகால் பணிகளை இந்த மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், வெள்ள தடுப்பு நடவடிக்கை மற்றும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம், தலைமை செயலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், துறை செயலாளர்கள், உயர் அதிகாரிகள் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா பேசியதாவது: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளின் தற்போதைய உண்மை நிலை குறித்து அறிய ஒரு பிரத்யேக குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு 45 இடங்களில் பெற்ற தகவல்கள் ஆய்வு செய்யப்பட்டது. அந்த ஆய்வில் விடுபட்ட இடங்களில் மழைநீர் வடிகால் பணிகளை துரிதப்படுத்துதல், தடுப்பரண் அமைத்தல், மின் கம்பங்கள் மாற்றியமைத்தல், குடிநீர் குழாய் மாற்றியமைத்தல் ஆகிய பணிகள் மொத்தம் 45 இடங்களில் நிலை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு இவ்விடங்களில் பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ரூ.85 கோடி மதிப்பீட்டில் சென்னை மாநகராட்சி, தாம்பரம் மாநகராட்சி மற்றும் ஆவடி மாநகராட்சி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் அனைத்தும் வரும் அக்டோபர் 15ம் தேதிக்குள் முடிக்கப்படும். மேலும், அண்ணாசாலை மற்றும் ஈ.வெ.ரா பெரியார் சாலையில் பணிகள் ஒரு மாத காலத்திற்குள் முடிக்கப்படும். நெடுஞ்சாலை துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து மழைநீர் வடிகால் பணிகள், பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில் 17 கல்வெட்டு தூர்வாரும் பணி மற்றும் அனைத்து மழைநீர் வடிகால்களையும் தூர்வாரும் பணியினை செப்டம்பர் மாத இறுதிக்குள் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மிகவும் பாதிக்கப்படும் இடங்களில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் வெள்ளத் தடுப்பு பணிகள் அனைத்தும் செப்டம்பர் மாத இறுதிக்குள் முடிக்கப்படும். 2023-2024ம் ஆண்டு இறுதியில் 15 இடங்களில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் தணிகாச்சலம் கால்வாய் மற்றும் மாதவரம் டேங்க் ஆகிய இடங்களில் செப்டம்பர் மாதம் இறுதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தாம்பரம் மாநகராட்சி ராமன் தெரு மற்றும் சிட்லபாக்கம் பகுதிகளில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும். தடுப்பரண் அமைத்து பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆவடி மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும்.
சென்னை மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறும் இடங்களான, வடபழனி ஆற்காடு சாலை, வளசரவாக்கம் பகுதிகளில் மழைநீர் தேங்கா வண்ணம் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காளியம்மன் கோயில் தெருவில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணி மற்றும் பனகல் பூங்காவில் கீழ்நிலை நீர்தொட்டி அமைக்கும் பணிகளையும் விரைவில் முடிக்க வேண்டும். போட் கிளப் சாலையில் மெட்ரோ ரயில் நிலையம் அமையவுள்ள பகுதியில் கைடுவால் அமைத்து மழைநீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.