திருத்தணி, ஆக. 22: சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அரசு பள்ளி மாணவர்கள் சாகச பயணத்தால் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. திருத்தணி மற்றும் சுற்று வட்டார கிராமங்களிலிருந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் பேருந்துகளில் திருத்தணிக்கு வந்து படித்து வருகின்றனர். இந்நிலையில் சமீப காலமாக திருத்தணி அரசுப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் அரசுப் பேருந்துகளில் ஜன்னல் கம்பிகள் பிடித்துக் கொண்டு, தொங்கியவாறும், பஸ் படிகளில் நின்றுகொண்டும் பயணிக்கும் முறை அதிகரித்து வருகின்றது. இதனால் பேருந்துகள் இயக்க ஓட்டுநர்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், திருத்தணி டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நேற்றுமுன்தினம் மாலை பள்ளி முடிந்த பின்னர், சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாக தடம் எண் 71 நல்லாட்டூர் வரை செல்லக்கூடிய அரசு பேருந்தில் தரணிவராகபும், முருக்கம்ப்பட்டு, பொன்பாடி, பூனிமாங்காடு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் பஸ் படிக்கட்டில் தொங்கியபடியும், ஒரு சில மாணவர்கள் பேருந்தின் ஜன்னல் கம்பி மீது நின்றுக்கொண்டு, ஆபத்தான முறையில் சாகச பயணம் செய்தனர். அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் எடுத்துக் கூறியும் மாணவர்கள் கண்டுக் கொள்ளாமல் பயணம் செய்ததால், பேருந்தில் பயணம் செய்த பயணிகள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்றனர்.பேருந்துகளில் ஸ்டைலாக சாகச பயணம் செய்து உயிழிப்பு ஏற்படும் முன்பு போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து பாதுகாப்பான பேருந்து பயணத்தை உறுதிப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.