சென்னை, செப். 4: சென்னை தி.நகரை சேர்ந்த சூர்யா என்பவர் கணவரிடம் இருந்து தனக்கு விவாகரத்து கோரி விருத்தாசலம் சார்பு நீதிமன்றத்தில் கடந்த 2022ல் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில், வழக்கை சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி கணவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் வழக்கை சென்னை 7வது கூடுதல் குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து கடந்த 2023ல் உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. ஆனால், வழக்கு விசாரணையில் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே, வழக்கை தினம் தினம் விசாரணை என்ற அடைப்படையில் விசாரித்து முடிக்குமாறு 7வது கூடுதல் குடும்பநல நீதிமன்றத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று சூர்யா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.ஒய்.ஜார்ஜ் வில்லியம்ஸ் ஆஜராகி வாதிடும்போது, குடும்பநல நீதிமன்றங்களில் போதுமான பணியாளர்கள் இல்லை. பல நீதிமன்றங்களில் நீதிபதிகள் பதவிகள் காலியாக உள்ளன என்றார். இதைக்கேட்ட நீதிபதி, மனுதாரரின் வழக்கு நிலுவையில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து அந்த நீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மனுதாரரின் வழக்கை எத்தனை நாட்களில் முடிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தார்.