காஞ்சிபுரம், ஜூன் 18: சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை இயக்கப்படும் மின்சார ஏசி ரயிலை காஞ்சிபுரம் வரை நீட்டிக்க வேண்டும் என ரயில் பயணிகள் பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர். சென்னை ரயில்வே கோட்டத்தில் சென்னை, ஆவடி, தாம்பரத்திற்கு அடுத்தபடியாக மாநகராட்சி அந்தஸ்து பெற்ற நகரம் காஞ்சிபுரம். ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி வரை விரிவடைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து தினமும் ஏராளமானோர் வேலை, கல்வி, தொழில், மருத்துவ சிகிச்சை, பொழுதுபோக்கு சம்மந்தமாக சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு ரயிலில் சென்று வருகின்றனர்.
இதற்காக மாவட்ட தலைநகரான காஞ்சிபுரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் மின்சார ரயில்களையே நம்பி உள்ளனர். மேலும், காஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக்கு அரசு, தனியார் நிறுவனங்களில் வேலைக்கு செல்பவர்கள் மின்சார ரயில்களையே நம்பி உள்ளனர். காஞ்சிபுரத்தில் இருந்து காலை 7.20, 8.15 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்களில் பயணிகள் கூட்டம் குவிவதால், அமர இருக்கை கிடைக்காமல் கீழே அமர்ந்து ஏராளமானோர் பயணிக்கின்றனர். நிற்கக்கூட இடம் இல்லாமல் பயணிகள் சிரமம் அடைகின்றனர்.
கோடைகாலத்தில் பயணிகள் இட நெருக்கடியுடன் பயணிப்பதால் உடல் உபாதைகள் ஏற்படுகிறது. சமீபத்தில் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை புறநகர் ஏசி ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், அலுவலகம் செல்பவர்கள், மாணவர்கள் என புறநகர் ரயில் சேவையை பயன்படுத்தும் பயணிகளுக்கு நவீன வசதியான பயண அனுபவத்தை இந்த சேவை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல, காஞ்சிபுரம் மக்களுக்கும் இந்த ஏசி ரயில் சேவை கிடைக்க வேண்டும். கோடை வெயில் சுட்டெரிக்கும் இந்த நேரத்தில் ஏசி ரயில்களை, தெற்கு ரயில்வே காஞ்சிபுரம் நகரத்திற்கு அறிமுகம் செய்ய வேண்டும்.
காஞ்சிபுரம் உலகப் புகழ்பெற்ற கோயில் நகரமாகவும், பட்டு நகரமாகவும், சுற்றுலா நகரமாகவும் விளங்குவதால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் ரயில் மூலம் சென்னை சென்ட்ரல், எழும்பூர் வந்து அங்கிருந்து புறநகர் ரயில்கள் மூலம் காஞ்சிபுரம் வருகின்றனர். அதேபோல சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர் மக்களும் கோயில்களை சுற்றிப் பார்க்கவும், பட்டுப்புடவை வாங்கவும் சென்னை புறநகர் ரயிலில் காஞ்சிபுரம் வருகின்றனர். சென்னை கடற்கரையில் இருந்து காஞ்சிபுரத்திற்கும், காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கும் ஏசி புறநகர் ரயில்களை அறிமுகம் செய்தால் அனைத்து தரப்பினரும், களைப்பு இல்லாமல் ரயிலில் பயணிக்க முடியும். ஆகவே, பொதுநலன் கருதி காலை மற்றும் மாலை நேரங்களில் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை இயக்கப்படும் ஏசி ரயில் சேவையை காஞ்சிபுரம் வரை நீட்டிக்கவும், செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் ஏசி ரயில் சேவையை காஞ்சிபுரத்தில் இருந்தும் தொடங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் தரப்பில் கோரிக்ைக வைக்கப்பட்டுள்ளது.