சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வளாகத்தில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமுக்கு சிலை அமைக்கப்படும் என்று அறிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு இளைஞர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. தமிழ்நாடு இளைஞர்கள் சங்கம் மாநில தலைவர் எம்.எம்.ஆர்.மதன் இன்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு இளைஞர்கள் சங்கத்தின் 5 ஆண்டு தொடர் முயற்சியில் நீண்ட கால கோரிக்கையான முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் திருஉருவ சிலையை சென்னையில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வந்தோம். தொடர்ந்து சென்னை கிண்டியில் மருதுபாண்டியர் சிலை திறப்பு விழாவிற்கு கடந்த 14ம் தேதி வருகை தந்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தோம். செய்தி விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனிடம் உடனடியாக பேசி தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து சென்னை அண்ணாப்பல்கலைக்கழக வளாகம் அருகே முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமிற்கு சிலை அமைக்கப்படும் என அமைச்சர் சாமிநாதன் அறிவித்துள்ளார். இதற்காக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு இளைஞர்கள் சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும், அப்துல் கலாம் பிறந்த நாளான அக்டோபர் 15ம் தேதி மத்திய அரசு தேசிய விடுமுறை அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….