நன்றி குங்குமம் தோழி சென்னை அசோக் நகர் பகுதி… மாலை அந்திசாயும் நேரம். வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்ட வெள்ளை மற்றும் மஞ்சள் நிற வேனை சுற்றி மக்கள் கூட்டம். கூட்டத்திற்கு நடுவே பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருந்தார் சிந்துஜா. ஆர்டர் எடுப்பதும், கேட்டவர்களுக்கு சப்ளை செய்வதும் என காலில் பம்பரம் கட்டிக் கொண்டு சுழண்டுக் கொண்டு இருந்தார் சிந்துஜா. இவர் பாராமெடிக்கல் படிப்பை முடித்துவிட்டு, மருத்துவமனையில் ஏ.சி அறையில் வேலைப் பார்த்து வந்தவர். வேலையை ராஜினாமா செய்தவர் சொந்தமாக ‘ஃபுட் டிரக்’ ஒன்றை நிர்வகித்து வருகிறார்.‘‘எனக்கு பிடிச்ச தொழில், அதனால் ரொம்ப ஆர்வமா செய்றேன்’’ என்றவர், ‘ஃபுட் டிரக்’கை ஆரம்பித்து பத்து மாதமாகிறதாம்.‘‘இன்னும் இரண்டு மாதங்களில் நான் சொந்தமா தொழில் துவங்கி ஒரு வருடமாகிடும். ரொம்பவே சந்தோஷமா இருக்கு. இந்த ஒரு வருடத்தில் நான் பல மேடு பள்ளங்களை தாண்டி வந்திருக்கேன். அந்தப் பாதையை திரும்பி பார்க்கும் போது எனக்கே பிரமிப்பாதான் இருக்கு. பிறந்து, வளர்ந்து, தவழ்ந்தது எல்லாம் சென்னையில். பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு பாராமெடிக்கல் துறையை தேர்வு செய்து படிச்சேன். படிச்சு முடிச்ச கையோடு நல்ல சம்பளத்தில் மருத்துவமனையில் வேலையும் கிடைச்சது.வேலைக்கு சேர்ந்த ஒரு வருடத்தில் கல்யாணம். குடும்பம் மற்றும் வேலைன்னு என்னால் முழுமையாக வேலையை தொடர முடியவில்லை. அதனால் ஏதாவது தொழில் துவங்கலாம்ன்னு நினைச்சேன். என் கணவரிடம் சொன்ன போது அவரும் உனக்கு பிடிச்சு இருந்தா செய்ன்னு பச்சைக் கொடி காண்பித்தார். என்ன தொழில் செய்வதுன்னு யோசித்த போது எனக்கு முதலில் ஸ்ட்ரைக் ஆனது, உணவகம் தான். காரணம் நான் ஒரு ஃபுட்டீ, அதாவது உணவுப் பிரியை. எங்க ஒரு புதிய உணவகம் திறந்தாலும், அங்க என்ன உணவு, எப்படி இருக்கு, என்ன புதுமையா அறிமுகம் செய்து இருக்காங்கன்னு போய் பார்த்திடுவேன்.இப்படி ஒவ்வொரு இடமா போய் நான் பல உணவுகளை சுவைத்து இருக்கேன். அதன் வெளிப்பாடு தான் ‘ஃபுட் டிரக்’. உணவகம் ஆரம்பிக்க முடிவானது, ஆனால் ரெஸ்ட்டாரன்ட் போல் அமைக்க முடியாது. இப்போது சாலை ஓரத்தில் நிறைய உணவகங்கள் உள்ளன. அதை போலவும் ஆரம்பிக்கும் எண்ணம் இல்லை. பி மற்றும் ஏ சென்டர் மக்கள் வந்து சாப்பிடக்கூடிய தரமான மற்றும் நியாயமான விலையில் உணவுகளை வழங்க நினைச்சேன். வெளிநாடுகளில் இது போன்ற ‘ஃபுட் டிரக்’ உணவகம் பிரபலம். இங்கு சென்னையிலும் ஒரு சில இடங்களில் ஃபுட் டிரக்குகளை நான் பார்த்து இருக்கேன். அதை போலவே ஆரம்பிக்கலாமான்னு முடிவு செய்தேன்.எனக்கு மற்றவர்கள் போல் ஃபிரைட் ரைஸ், சிக்கன் 65 வைக்க விருப்பமில்லை. இது போன்ற கடைகள் தெருக்கு தெரு உள்ளன. என் உணவில் கொஞ்சம் மாற்றம் வேண்டும்ன்னு நினைச்சேன். இத்தாலியன் மற்றும் மெக்சிகன் உணவுகளான பீட்சா, பர்கர், வாஃபில்ஸ், பாஸ்தான்னு தேர்வு செய்தேன்’’ என்றவர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழுமையாக இதில் இறங்கியுள்ளார். ‘‘சொந்தமா தொழில் செய்வதுன்னு முடிவான பிறகு என் வேலையை ராஜினாமா செய்தேன். முதலில் ஃபுட் டிரக்கை தயார் செய்யணும். இந்த மாதிரி வண்டி எங்கு தயாரிக்கிறாங்கன்னு இணையத்தில் தேடினேன்.என் பட்ஜெட்டுக்கு ஏற்ப வடிவமிச்சேன். அடுத்து நிறைய ஃபுட் சேனல்கள் மற்றும் இணையங்களை பார்க்க ஆரம்பிச்சேன். நான் மருத்துவ துறையில் இருந்ததால், எது நல்லது? எது கெட்டதுன்னு தெரியும். அந்த உணவுகளை தவிர்த்தேன். முக்கியமாக ஃபுரோசன் உணவுகள். பாஸ்தாவில் பயன்படுத்தப்படும் சாஸ்களை கூட நானே தயாரிச்சேன். அதே போல் எந்த உணவையும் முன்பே தயார் செய்வது கிடையாது. அதாவது பாஸ்தா ஆர்டர் வந்த பிறகு தான் அதற்கான காய்கறிகளை நறுக்குவேன்’’ என்றவருக்கு சின்ன வயதில் இருந்தே சமையல் மேல் ஆர்வம் அதிகமாம்.‘‘நான் 10ம் வகுப்பு படிக்கும் போதே சமைக்க ஆரம்பிச்சுட்டேன். என் கடையில் மெனுவில் இருக்கும் உணவுகள் அனைத்தும் நானே வீட்டில் டிரயல் அண்ட் எரர் முறையில் உருவாக்கினது. பிறகு செஃப் வந்ததும் அவர் அதில் சில மாற்றங்களை செய்தார். ஒரு பெண்ணாக நான் இந்தக் கடையை நடத்துவதால், பலர் குடும்பமாக வந்து தயக்கமில்லாமல் சாப்பிடுறாங்க. சில சமயம் கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளும் வந்து சாப்பிடுறாங்க. இங்கு தற்போது 20 முதல் 40 உணவுகளை பரிமாறுகிறோம். மேலும் மாதம் ஏதாவது ஒரு புது உணவினை அறிமுகம் செய்கிறோம்.அதே போல் இன்று சமைக்கும் உணவு மீந்து போனால் மறுநாள் எடுத்து வைப்பதில்லை. எங்களின் ‘ஃபுட் டிரக்’, ஓபன் டிரக் என்பதால், நாங்க என்ன சமைக்கிறோம்ன்னு வாடிக்கையாளர்களால் பார்க்க முடியும். நாங்க தவறு செய்தால் அவர்கள் சுட்டிக் காண்பிப்பார்கள். இதன் மூலம் நான் இல்லாத போது, மற்றவர்கள் தவறு செய்யமாட்டார்கள். இந்த ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு நாளும் நிறைய பாடம் கத்துக்கிட்டேன். கடை திறந்தவுடனே லாபம் பார்க்க முடியாது. குறைந்தபட்சம் ஆறு மாத காலமாகும். சில சமயம் வெள்ளிக்கிழமை நல்ல கூட்டம் வரும்ன்னு எதிர்பார்ப்போம்.ஆனால் அப்படி இருக்காது. உணவு விஷயத்தில் எதுவுமே நாம் நினைப்பது போல் நடக்காது. இது டிரக் என்றாலும் சாலையில் தான் நிறுத்தவேண்டும் என்பதால், மழை காலங்களில் கொஞ்சம் கஷ்டமா இருக்கும். அந்த சமயத்தில் எல்லாரும் கடைக்குள்ள அமைதியா உட்கார்ந்திடுவோம். மழை விட்டதும் கூட்டம் எங்கிருந்து தான் வரும்ன்னு தெரியாது. ஒரு அரை மணி நேரத்துக்கு மழை பெய்த சுவடே தெரியாமல் நாங்க பிசியாகிடுவோம்’’ என்றவர் பெண்ணா இருந்தாலும் தைரியமாக செயல்பட வேண்டும் என்றார். ‘‘நான் தொழில் செய்ய போறேன்னு சொன்னதும், எங்க வீட்ல யாரும் ஒத்துக்கல.நல்ல வேலைய விட்டுட்டு இப்படி ரோட்டுல ஏன் நிக்கணும்ன்னு கேட்டாங்க. எனக்கு பிடிச்ச வேலை. சந்தோஷமா செய்றேன். என்னதான் நாம பெண் சுதந்திரம்ன்னு பேசினாலும், ஒரு பெண் வெளியே துணிந்து வந்தா, அதை கிண்டல் செய்ய நாலு பேர் வரத்தான் செய்வாங்க. நாம அவர்களை நிராகரிச்சுட்டா போதும். ஆரம்பத்தில் பிசினஸ் ஈசின்னு நினைச்சேன். வந்த பிறகு தான் இதில் உள்ள கஷ்டம் தெரிஞ்சது. அதுவும் பெண்களுக்கு இது அவ்வளவு சுலபமில்லை. எந்த தொழிலா இருந்தாலும் கடினமா உழைக்கணும். பெண்கள் சொந்தமா தொழில் செய்வது தப்பில்லை. ஆனா அதில் அடி எடுத்து வைக்கும் முன் 100 தடவை யோசிங்க.பெண்கள் ஒரு வேலை மட்டுமே செய்வதில்லை. வீட்டையும் குடும்பத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கு. நான் கடையில் இருந்து கிளம்பவே இரவு 10 மணிக்கு மேல் ஆயிடும். என் கணவர் இரவு 10.30க்கு வந்திடுவார். நான் கடைய பார்த்துக்கிறேன். அதனால் இரவு உணவு தயாரிக்க முடியாதுன்னு சொல்ல முடியாது. அதுவும் என் கடமை தான். வீடு, தொழில் இரண்டையும் சமமாக பார்க்க தெரியணும். அதே சமயம் பிசினசிலும் கால்குலேட்டிவா இருக்கணும். லாபமோ, நஷ்டமோ.. எதற்குமே சரியான கணக்கு இருக்கணும். எந்த தொழிலாக இருந்தாலும், முழு கவனம் செலுத்தினால் கண்டிப்பாக நம்மால் சாதிக்க முடியும்’’ என்றார் சிந்துஜா.– ப்ரியாபடங்கள் : ஏ.டி.தமிழ்வாணன்…
சென்னையின் லேட்டெஸ்ட் டிரண்ட்…
103
previous post