சென்னை, ஜூன் 6: சென்னை மாநகராட்சி பகுதிகளில், ஒரு லட்சம் நாட்டுரக மரக்கன்றுகள் நடும் திட்டத்தை, மேயர் பிரியா தொடங்கி வைத்தார். இந்த மரக்கன்றுகள் பூங்காக்கள், ஏரிக்கரையோரங்களில் நடப்பட உள்ளது.
சென்னை மாநகராட்சி 426 சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. மாநகராட்சி தரவுகளின்படி இம்மாவட்டத்தில் மொத்தம் 21 லட்சத்து 21 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன. மக்கள்தொகை 80 லட்சமாக உள்ளது. தினமும் சுமார் 15 லட்சம் பேர் சென்னைக்கு வந்து செல்கின்றனர்.
இங்கு சராசரியாக ஒரு சதுர கி.மீ பரப்பில் 26 ஆயிரம் பேரும், வடசென்னை போன்ற பகுதிகளில் சில இடங்களில் ஒரு சதுர கி.மீ பரப்பில் 65 ஆயிரம் பேரும் வசிக்கின்றனர். ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சக வழிகாட்டுதல்படி, மாநகரின் மொத்த நிலப்பரப்பில் 33.3 சதவீதம் பசுமைப் போர்வையுடன் இருக்க வேண்டும். அப்படியெனில், 426 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட சென்னையில் 144 சதுர கி.மீ (33 சதவீதம்) பரப்பளவுக்கு பசுமைப் போர்வை இருக்க வேண்டும். ஆனால் கடந்த 2021ம் ஆண்டு நடத்தப்பட்ட வன கணக்கெடுப்பு அறிக்கையில் சென்னை மாநகரில் 22.70 சதுர கி.மீ (5.28 சதவீதம்) அளவே பசுமைப் போர்வை உள்ளது என குறிப்பிட்டுள்ளது.
கடலோர நகரம் என்பதால், சென்னையில் பசுமை பரப்பு குறைவாக இருப்பதின் தாக்கம் உணரப்படவில்லை. இந்நிலையில், சென்னை மாநகராட்சி சார்பில் 33.3 சதவீதம் பசுமைப் பரப்பை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, சென்னை மாநகராட்சி பகுதிகளில் பசுமை பரப்பை அதிகரித்திடும் வகையில், ஒரு லட்சம் நாட்டுரக மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் தொடக்க விழா, ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று நடந்தது. மேயர் பிரியா தலைமை வகித்து ரிப்பன் மாளிகை வளாகத்தில் மரக்கன்றுகளை நடும் பணியை தொடங்கி வைத்தார்.
இதை தொடர்ந்து, சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஒரு லட்சம் நாட்டுரக மரக்கன்றுகள் நடும் பணியில் முதற்கட்டமாக மண்டலம் 1 முதல் 15 வரை 12,175 மரக்கன்று நடவு செய்வதற்கான வாகனத்தை மேயர் பிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தார். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பசுமை பரப்பை அதிகரிக்கும் வகையில், ஒரு லட்சம் நாட்டுவகை மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டு, முன்னோட்டமாக மணலி மண்டலத்தில் 10 அடி உயரம் கொண்ட 250 மகிழம் மரக்கன்றுகளை நடவு செய்து சொட்டு நீர் பாசனம் மூலம் சென்னை மாநகராட்சி பராமரித்து வருகிறது.
நன்கு வளர்ந்த நாட்டுரக மரக்கன்றுகள் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மண்டலங்கள் 1 முதல் 15 வரை உள்ள பூங்காக்கள், திறந்தவெளி நிலங்கள், சாலையோரம் குளம், ஏரிக்கரை போன்ற இடங்களில் நடவு செய்யப்படவுள்ளது. இதில் ஆலமரம், அரசமரம், பூவரசம், செண்பகம், சிவப்பு சாண்டர், வில்வம், நீர் மருது, இளுப்பை, நாவல், பலா, காரி பலா, புங்கன், அத்தி, ரோஸ்வுட், புன்னை, மகாகோனி, மகிழம், மலை வேம்பு, நெல்லிக்காய் உள்ளிட்ட நாட்டு மரக்கன்றுகள் நடவு செய்யப்படவுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் சென்னை மாநகராட்சி மூலம் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். பின்னர், தூய்மை இயக்கம் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் கழிவுகளை சேகரித்து மறுசுழற்சி மீள்பயன்பாடு மேற்கொள்ளும் ஒரு மாபெரும் முன்னெடுப்பில், தூய்மை தமிழ்நாடு நிறுவனத்தின் மூலம் சென்னை மாநகராட்சி அலுவலகங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரிப்பன் கட்டிட வளாகத்தில் தனித்தனியாக குப்பை சேகரிக்கும் நடவடிக்கைகளை மேயர் பிரியா பார்வையிட்டார்.
இதன் தொடர்ச்சியாக, சென்னை மாநகராட்சி அலுவலகங்களில் குப்பை சேகரிக்கும் நடவடிக்கைகளை ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படுவதைப் பார்வையிட்டார். நிகழ்ச்சியில், துணை மேயர் மகேஷ்குமார், ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) வி.ஜெயசந்திர பானு ரெட்டி, இணை ஆணையாளர் (கல்வி) ஜெ.விஜயா ராணி, நிலைக்குழுத் தலைவர் (கல்வி) கோ. சாந்தகுமாரி, தூய்மை தமிழ்நாடு நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் கங்கா திலீப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜி.கே.எம் காலனி 24வது ‘ஏ’ தெருவில், சமீபத்தில் குளத்துடன் இணைந்த பூங்காவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிலையில், சுற்றுச்சூழல் தினத்தையொட்டி அந்த பூங்காவில் 150 மரக்கன்றுகள் நேற்று நடப்பட்டன. அதனைத் தொடர்ந்து மேயர் சிட்டி பாபு பூங்காவில் 50 மரங்கள் நடப்பட்டன. நிகழ்ச்சியில் வட்டார துணை ஆணையர் பிரவீன் குமார், மண்டல குழு தலைவர் சரிதா. திருவிக நகர் மண்டல அலுவலர் சரவணன், செயற்பொறியாளர் சதீஷ், உதவி செயற்பொறியாளர் பாபு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல், கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்லவன் சாலை பகுதியில் உள்ள கால்பந்தாட்ட விளையாட்டு மைதானம் மற்றும் தாங்கள் சுடுகாடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 60 மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சியில், மாமன்ற உறுப்பினர் தாவூத் பீ, உதவி செயற்பொறியாளர் ரவிவர்மன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
சொட்டுநீர் பாசனம்
மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் கூறுகையில், ‘‘மாநகரின் பசுமைப் பரப்பை அதிகரிக்க, மாநகராட்சி மயானங்களில் காலியாக உள்ள இடங்களில் மரக்கன்றுகளை நடும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. மயிலாப்பூர் மயானத்தில் 500 மரக்கன்றுகள் நடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மணலி மயானத்தில் 250 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதேபோல், அனைத்து மயானங்களிலும் மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 12 அடி உயரம் வரை வளர்ந்த மரக்கன்றுகள்தான் நடப்பட்டு வருகின்றன. அனைத்து பகுதிகளிலும் சொட்டுநீர் பாசன கட்டமைப்பு ஏற்படுத்தி, அதன்மூலம் மரக்கன்றுகளுக்கு நீர் பாய்ச்ச திட்டமிடப்பட்டுள்ளது. மாநகர மண் வகைக்கும், சாலைகளின் அகலத்துக்கும் ஏற்ப உள்ளூர் மர வகைகள் தேர்வு செய்து நடப்படும். பறவைகளுக்கு உணவளிக்கும் விதமாக இலந்தை, நாவல், அத்தி போன்ற பழ மரங்கள் மற்றும் கொடுக்காபுளி மரங்களும் நடப்பட உள்ளன,’’ என்றார்.