ஸ்ரீவில்லிபுத்தூர், ஆக.31: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மலையில் இருந்து செண்பகத்தோப்பிற்கு இறங்கி வந்த யானைகளை, ட்ரோன்கள் மூலம் விடிய, விடிய வனத்துறையினர் விரட்டினர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மேகமலை புலிகள் காப்பகம் உள்ளது. இப்பகுதியில் இருந்து 5க்கும் மேற்பட்ட யானைகள் நேற்று முன்தினம் மாலை அடிவாரத்துக்கு இறங்கி வந்தன. மேலும், பல்வேறு தோப்புகள் வழியாக வந்து செண்பகத்தோப்பு சாலையில் நின்றன.
இது குறித்து தகவல் அறிந்த ரேஞ்சர் செல்லமணி தலைமையிலான வனத்துறையினர் நேற்று முன்தினம் இரவு 9 மணி முதல் நேற்று அதிகாலை 5 மணி வரை ட்ரோன்கள் உதவியுடன் யானை நடமாட்டத்தை கண்காணித்து விரட்டினர். இது குறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவராஜ் உத்தரவின்படி, யானைகள் நடமாட்டத்தை தொடர்ச்சியாக கண்காணித்து வந்தோம். அதன் அடிப்படையில் இரவு 9 மணியிலிருந்து யானை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.
யானைகள் மலைப்பகுதி அடிவாரத்தில் இருந்து பல கி.மீ தூரத்தை கடந்து மம்சாபுரம் செண்பகத்தோப்பு சாலையில் வரிசையாக நின்றன. எனவே, இரவு நேரங்களில் செண்பகத்தோப்பு-மம்சாபுரம் சாலையில் விவசாயிகள் செல்ல வேண்டாம். பகல் நேரங்களில் மட்டுமே சாலையை பயன்படுத்த வேண்டும். பகலிலும் ட்ரோன்களை பறக்கவிட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து, அவைகளை மலை உச்சிக்கு விரட்ட நடவடிக்கை எடுத்து வருகிறோம்’ என்றார்.