பாடாலூர், ஜூன் 11: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலில் வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கிரிவலம் வந்தனர். ரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் வடபழனி என்றழைக்கப்படும் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் மலை மீது அமைந்துள்ளது. இந்த மலையைச் சுற்றி ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று கிரிவலம் நடைபெற்று வருகிறது.அதன் படி, வைகாசி மாத பௌர்ணமி கிரிவலம் நேற்று மாலை நடைபெற்றது. கிரிவலத்தை முன்னிட்டு மலைமீதுள்ள தண்டாயுதபாணி சுவாமிக்கு பால், பன்னீர், சந்தனம், குங்குமம், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர், மலை அடிவாரத்தில் அலங்கரிக்கப்பட்ட முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து, மலையைச் சுற்றி அரோகரா, அரோகரா என்ற கோஷத்துடன் பக்தர்கள் கிரிவலம் வந்தனர். பின்னர் மலைக்கோயிலை சுற்றி வெள்ளி தேரை இழுத்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கிரிவலத்தில் செட்டிகுளம், நாட்டார்மங்கலம், கூத்தனூர், இரூர், பாடாலூர், ஆலத்தூர்கேட், நாரணமங்கலம், குரூர், சிறுவயலூர், நக்கசேலம், மாவலிங்கை, சத்திரமனை, பொம்மனப்பாடி, வேலூர் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.