பாடாலூர், ஆக. 3: மாநிலம் முழுவதும் நேற்று நடைபெறும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் பங்கேற்க, குழுவில் அங்கம் வகிக்கும் பெற்றோா் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறை சார்பில், 2024 – 2026 ஆவது கல்வியாண்டு வரையிலான ஆண்டுகளுக்கென புதிதாக கட்டமைக்கப்படவுள்ள பள்ளி மேலாண்மை குழுவின் விழிப்புணர்வுக் கூட்டம் தமிழ்நாடு முழுவதும் நேற்று நடந்தது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. பள்ளித் தலைமையாசிரியர் ராஜம்மாள் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் கலா தங்கராசு, ஒன்றிய கவுன்சிலர் திருநாவுக்கரசு, பள்ளி மேலாண்மை குழு தலைவர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், 2024-2026ம் ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மை குழுவின் புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பள்ளி மேலாண்மை குழுவின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து பேசினர். கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி வளர்ச்சிக்காக பணியாற்றிய பள்ளி மேலாண்மை குழு தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்கள் கவுரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வில், முன்னாள் பள்ளியின் தொழிற்கல்வி ஆசிரியர் ராதாகிருஷ்ணன், பள்ளி உதவி தலைமையாசிரியர் லதா, பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர் சாந்தி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, உதவி தலைமையாசிரியர் கலியமூர்த்தி அனைவரையும் வரவேற்று பேசினார். முடிவில், உதவி தலைமையாசிரியர் தெய்வானை நன்றி கூறினார்.